பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு பவினா பட்டேல் தகுதி: அரையிறுதியில் சீன வீராங்கனையை வீழ்த்தி அசத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு பவினா பட்டேல் தகுதி: அரையிறுதியில் சீன வீராங்கனையை வீழ்த்தி அசத்தல்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பவீனா பட்டேல் வீல் சேரில் அமர்ந்த நிலையில், ரவுண்ட் 16 சுற்றில் பிரேசிலின் ஜாய்ஸ் டி ஒலிவியராவுடன் நேற்று விளையாடினார். 3-0 என வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

தொடர்ந்து கால் இறுதியில், செர்பியாவின் பெரிக் ரன்கோவிக்குடன் மோதினார். இதில் ஆதிக்கம் செலுத்திய பவினா 3-0 என (11-5, 11-6, 11-7 ) எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

தொடர்ந்து இன்று காலை நடந்த அரையிறுதி போட்டியில் சீனாவின் மியாவோ ஜாங்குடன் பவினா மோதினார்.

இதில் முதல் செட்டை 7-11 என இழந்த பவினா 2வது செட்டை 11-7, 3வது செட்டை 11-4 என எளிதாக கைப்பற்றினார். ஆனால் 4வது செட்டை 11-9 என சீன வீராங்கனை கைப்பற்றினார.

4 செட் முடிவில் 2-2 என சமனில் இருக்க வெற்றியை தீர்மானிக்கும் பரபரப்பான 5வது செட்டை 11-8 என பவினா கைப்பற்றினார். முடிவில் 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பவினா இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்திய நேரப்படி நாளை காலை 7. 15 மணிக்கு நடக்கும் இறுதி போட்டியில் சீனாவின் ஹூயங்குடன் மோதுகிறார். இதில் வெற்றி பெற்றால் பவினா தங்கப்பதக்கம் வெல்வார்.தோல்வி அடையும் பட்சத்தில் வெள்ளிப்பதக்கம் கிடைக்கும். அரையிறுதியில் வென்ற பின் பவினா கூறுகையில், ``சாத்தியம் இல்லாதது எதுவும் இல்லை என்று நிரூபித்து உள்ளேன்.

நான் இறுதி போட்டிக்கு செல்வேன் என்று நினைத்தது இல்லை.   100 சதவீதம் விளையாடினேன். இறுதி போட்டிக்கு மனதளவில் தயாராக உள்ளேன்.

இதுபோன்று தொடர்ந்து விளையாடினால், நிச்சயம் தங்க பதக்கம் வெல்வேன்’’ என்றார்.

.

மூலக்கதை