ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது ‘ட்ரோன்’ தாக்குதல்: காபூல் வெடிகுண்டு சம்பவத்திற்கு அமெரிக்கா பதிலடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆப்கானிஸ்தான்  பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது ‘ட்ரோன்’ தாக்குதல்: காபூல் வெடிகுண்டு சம்பவத்திற்கு அமெரிக்கா பதிலடி

புதுடெல்லி: காபூல் மனித ெவடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் ‘ட்ரோன்’ தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இதனால், இந்திய - ஆப்கான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு - காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படை உஷார் படுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூலில் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த தொடர்  குண்டுவெடிப்பில் 95 ஆப்கானிஸ்தான் மக்கள் உட்பட 110க்கும் மேற்பட்டோர்  பலியாகினர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இறந்தவர்களில், 3 இங்கிலாந்து படை வீரர்கள், 13  அமெரிக்க வீரர்களும் அடங்குவர்.

விமான நிலைய தாக்குதல்களில் கொல்லப்பட்ட  வீரர்களின் நினைவாக, வரும் 30ம் தேதி மாலை வரை அமெரிக்க நாட்டின் தேசியக்  கொடி, அரை கம்பத்தில் பறக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தலைமையில் தேசிய பாதுகாப்பு குழுவின் அவசர கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் ஆப்கான் நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜேன் சகி கூறுகையில், ‘காபூலில் மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. அதனால் காபூல் விமான நிலையத்தில் உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.



ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கர்கள் வெளியேற தயாராக இருக்கும் நிலையில், அடுத்த சில நாட்கள் மிக ஆபத்தான நாட்களாக இருக்கும்’ என்றார். மேலும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட  ஐஎஸ் தீவிரவாதிகள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த புதிய படைக் குழுவை அதிபர் ஜோ பிடன் நியமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இன்று ஆப்கானிஸ்தான் தலைநகர்  காபூலில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ஐஎஸ்ஐஎஸ்  தீவிரவாத குழு மீது  அமெரிக்கா படைகள் பெரும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களில் அமெரிக்கா படை வீரர்கள் அதிரடி ‘ட்ரோன்’ தாக்குதல்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள நங்கர்ஹார் மாகாணத்தில்,  அமெரிக்கா படைகள் ட்ரோன் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தியது. காபூல் குண்டுவெடிப்பின் மூளையாக  செயல்பட்ட தீவிரவாதி, இந்த தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டான்’ என்று அந்த வட்டாரங்கள் கூறின.

இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நாட் பிரைஸ் கூறுகையில், ‘காபூல் விமான நிலையத்தை மீண்டும் ஆப்கானிஸ்தான் மக்களிடம் ஒப்படைப்போம். வரும் 31ம் தேதிக்குள் மக்களை வெளியேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.



ஆப்கானில் முகாமிட்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் தாக்குதல்களை தொடங்கியுள்ள நிலையில், இந்திய அரசும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கியுள்ளது. இந்தியாவிற்குள் ஊடுருவிய மற்றும் ஐஎஸ் ஆதரவாளர்கள் குறித்த நடமாட்டத்தை உளவு பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர்.

ஐஎஸ், தலிபான் ஆதரவு கருத்துகளை சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடுவோரையும் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘தலிபான், ஐஎஸ்எஸ், ஜெய்ஷ் - இ - முகமது, லக்‌ஷர் - இ - தொய்பா, அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய மற்றும் ஆதரவு கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவோரை கண்காணித்து வருகிறோம்.



பாகிஸ்தான் - ஆப்கான் எல்லையில் ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதால் இந்திய - பாகிஸ்தான் - ஆப்கான் எல்லைகளில் உஷார் படுத்தப்பட்டுள்ளது. தற்போது, பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை அமெரிக்கா வேட்டையாடி வருவதால், ஜம்மு - காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படைகளின் நவீன பிரிவுகள் உஷார் நிலையில் உள்ளன’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறுகையில், ‘இந்தியா உட்பட அனைத்து நாடுகளுடனும் நாங்கள் நல்ல உறவை வைத்துக் கொள்ள விரும்புகிறோம். ஆப்கானிஸ்தான் நிலத்தை, எந்த  நாட்டிற்கு எதிராகவும் பயன்படுத்த அனுமதிக்க முடியாது.

நாங்கள் இந்தியாவை எங்கள் பிராந்தியத்தின் முக்கிய பகுதியாக கருதுகிறோம்’ என்றார்.



காபூல் குண்டு வெடிப்பின் மூளையாக  செயல்பட்ட தீவிரவாதி, இந்த தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டான்.

.

மூலக்கதை