ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய ஒரு வாரத்தில் காபூல் இரட்டை குண்டுவெடிப்பில் 90 பேர் உடல் சிதறி பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய ஒரு வாரத்தில் காபூல் இரட்டை குண்டுவெடிப்பில் 90 பேர் உடல் சிதறி பலி

* 13 அமெரிக்க வீரர்கள் மரணம்; 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்
*  ‘ஐஎஸ்ஐஎஸ்-கே’ அமைப்பு பொறுப்பேற்பு; தலிபான்கள் கைவிரிப்பு


காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், காபூலில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 90 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ‘ஐஎஸ்ஐஎஸ்-கே’ அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், தலிபான்கள் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று கைவிரித்துள்ளனர்.

இது, சர்வதேச நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அமெரிக்க மற்றும் ‘நோட்டோ’ படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானை, கடந்த சில வாரங்களுக்கு முன் தலிபான்கள் (இஸ்லாமிய தீவிரவாத குழு) கைப்பற்றினர்.



அவர்கள், தங்களது மத அடிப்படைவாத சிந்தாந்தபடி புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆனால், இங்கு இன்னும் முறைப்படி ஆட்சி மாற்றம் நிகழவில்லை.

இந்நிலையில், அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், ஆப்கனில் தங்கியுள்ள தங்கள் நாட்டு மக்கள், தங்களுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் நாட்டவர் ஆகியோரை அந்நாட்டில் இருந்து மீட்டு வருகின்றன. விமானம் மூலமே அழைத்து செல்லப்படுவதால், தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.

கடந்த 14ம் தேதி தொடங்கி இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆப்கானில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், வரும் 31ம் தேதிக்குள் தங்களது பிரஜைகள் முழுவதுமாக வெளியேற்றப்படுவர் என்று அமெரிக்கா தெரிவித்தது.

இதற்கிடையே, காபூல் விமானநிலையத்துக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளும் எச்சரிக்கை விடுத்தன. மேலும், ஐஎஸ்ஐஎஸ் - கே தீவிரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பிரிவினர் தாக்குல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், விமான நிலையத்தில் அபே கேட், கிழக்கு கேட், வடக்கு கேட் உள்ளிட்டப் பகுதிகளில் குழுமியிருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பரோன் ஓட்டல் (பிரிட்டிஷ் வீரர்கள் தங்கியிருந்தனர்), விமான நிலையத்தின் அபே கேட் பகுதியில் நேற்று மாலை 3. 45 மணியளவில் (இந்திய நேரப்படி) திடீர் தற்ெகாலை படை ெவடிகுண்டு தாக்குதல் நடந்தது.

விமான நிலைய வளாகம் உள்ளிட்ட பகுதியில் மக்களும், தலிபான்களும், அமெரிக்க படைகளின் நடமாட்டமும் அதிகமாக இருந்ததால், அடுத்தடுத்த 2 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி நூற்றுக் கணக்கான மக்கள் சிதறியபடி வெடித்து தூக்கியெறியப்பட்டனர். அடுத்தடுத்த நிமிடங்களில் குண்டுவெடிப்பு நடந்த பகுதி ரத்த காடாக மாறியது.



‘வோல் ஸ்ட்ரீட்’ ஜர்னல் இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இதுவரை 90 பேர் குண்டு வெடிப்பில் பலியாகி உள்ளனர். இவர்களில் 13 பேர் அமெரிக்க மரைன் கமாண்டோக்கள் ஆவர்.

இவர்களை, 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் 15 அமெரிக்கர் உட்பட 200க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. உறவுகளை இழந்த மக்களின் கூக்குரல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்தடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பெரும் பதற்றம் நிலவிய நிலையில், காபூல் விமான நிலையத்தில் இருந்து அனைத்து விமான சேவைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன.

இந்த காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு ‘ஐஎஸ்ஐஎஸ்-கே’ என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஆனால், தலிபான்கள் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று அறிவித்துள்ளனர். ஆப்கானில் அமெரிக்கா படைகள் மிகப்பெரிய மீட்பு  நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளதால், அதனை முறியடிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே  ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால், இந்த கூட்டத்தை பயன்படுத்தி ‘ஐஎஸ்ஐஎஸ்-கே’ தற்கொலை படைத் தாக்குதலை நடத்தி உள்ளனர். மேலும், அடுத்தடுத்த தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதால், காபூல் நகரமே போர்க்கோலமாக காட்சியளிக்கிறது.

மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு ஐநா உட்பட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



அடுத்த சில மணிநேரங்கள் ஆபத்தானவை
காபூல் விமான நிலைய பகுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாத தற்கொலை படை கும்பலால், கார் வெடிகுண்டு மூலம் அடுத்த தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை கூறியுள்ளது. அதில், ‘தீவிரவாதிகள் எங்கள் விமானத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த சில மணி நேரங்கள் மிகவும் ஆபத்தானவையாக இருக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இத்தாலி நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், ‘காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்தில், இத்தாலியப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது’ என்று கூறுகின்றன.

தப்பி ஓட முயற்சிக்காதீர்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின்  குடியரசுக் கட்சி செனட்டரும், முன்னாள் செய்தித் தொடர்பாளருமான டேன்  கிரென்ஷா, காபூல் குண்டுவெடிப்பு குறித்து கூறுகையில், ‘நீங்கள் (ஜோ பிடன்) எழுப்பிய கேள்விகளுக்கு இப்போது பதில் கூறுங்கள். அதிலிருந்து தப்பி ஓட முயற்சிக்காதீர்கள்.

உங்கள் கைகளில் ரத்தக் கறை  படிந்துள்ளது. நாம் இன்னும் போர்க்களத்தில் இருக்கிறோம்.

மக்களுக்கு சிகிச்சை  அளிப்பதில் தவறு செய்யாதீர்கள். எதிரிகளுக்கு நீங்கள் மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளீர்கள்’ என்று கண்டித்துள்ளார்.

அமெரிக்க மத்திய படைகளின் தலைவர் ஜெனரல் கென்னத் மெக்கென்சி  கூறுகையில், ‘ஆரம்பத்தில் 12 அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டதாக  கூறினார். ஆனால் மற்றொரு வீரர் இறந்துள்ளார்.

காயமடைந்த அமெரிக்க  வீரர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின்  தற்கொலை படை, இந்த வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தி உள்ளது.

வெடிகுண்டு  தாக்குதல் நடந்த போதிலும், அமெரிக்காவின் விமானப் போக்குவரத்து தொடர்ந்து  நடைபெறும். ஐஎஸ் தாக்குதல்களை எதிர்பார்த்தோம்.

பதிலடி கொடுக்க தயாராக  உள்ளோம்’ என்றார்.

மீண்டும் தாக்குதல் பீதி!
அமெரிக்காவின் பென்டகன் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘விமான  நிலையத்திற்கு வெளியே மூன்று சந்தேக நபர்கள் காணப்பட்டனர்.

அவர்களில்  இருவர் தற்கொலைப் படையை சேர்ந்தவர்கள். தற்போது, ​​காபூல் விமான  நிலையத்தில் 5,000 பேர் விமானத்திற்காக காத்திருக்கின்றனர்.

இவர்களில்  1,000 பேர்  அமெரிக்கர்கள். ஆக.

14ம் தேதி முதல் ஒரு லட்சத்து நான்காயிரம் மக்களை  வெளியேற்றியுள்ளோம். இவர்களில் 66,000 பேர் அமெரிக்க மக்கள் மீதமுள்ள  37,000 பேர் அமெரிக்காவின் கூட்டாளி நாட்டு மக்கள் ஆவர்.

ஐஎஸ்ஐஎஸ்-கே பிரிவு தீவிரவாதிகள் தாக்குலை நடத்தி உள்ளனர். எதிர்காலத்தில்  இதுபோன்ற தாக்குதல் நடைபெறாத அளவிற்கு நடவடிக்கை எடுப்போம்.

விமான  நிலையத்தைச் சுற்றி அமெரிக்க கடற்படையை நிறுத்தி உள்ளோம். அதிநவீன போர்  விமானமான எப்-15 மற்றும் அப்பாச்சி ஹெலிகாப்டர் ஆகியவை பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளன.

தீவிரவாதிகள் தங்கியிருந்த இடத்தை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வசதியாக, ‘ரீப்பர் ட்ரோன்கள்’ பயன்படுத்தப்பட்டுள்ளன. காரணம், ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது’ என்றார்.



குண்டுவெடிப்பு துளிகள்
* இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காபூலில் நடந்த  குண்டுவெடிப்பை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. இன்றைய தாக்குதல் தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள்  ஒற்றுமையாக நிற்க வேண்டியதன் அவசியத்தை வலுப்படுத்துகின்றன’ என  தெரிவித்துள்ளது.
* காபூல் குண்டுவெடிப்பு சம்பவத்தை  தொடர்ந்து சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ள அமெரிக்க  துணை அதிபர் கமலா ஹாரிஸ், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு வாஷிங்டன்  திரும்புகிறார்.


* ஜெர்மனி நாடானது, இப்போதைக்கு அவர்களது மக்களை  அழைத்து வருவதற்கான திட்டத்தை ஒத்திவைத்துள்ளது. குண்டுவெடிப்பில்  காயமடைந்தவர்களை மீட்க, தனி விமானத்தை அனுப்பி உள்ளது.


* விமான  நிலையத்தை ஒட்டியுள்ள  வடிகாலில் இறந்த மற்றும் காயமடைந்தவர்களின் உடல்கள் சிதறிக் கிடக்கும்  வீடியோ வைரலாகி உள்ளது. ரத்தத்தால் நிரம்பிய அந்த வடிகாலில், மக்கள்  தங்களது உறவினர்களை தேடி வருகின்றனர்.

மரணத்திற்கு பொறுப்பேற்கிறேன்!
காபூல்  விமான நிலைய குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தலைமையில் வெள்ளை மாளிகையில் தேசிய  பாதுகாப்பு குழுவின் அவசர கூட்டம் நடந்தது.

ஒரு மணிநேரம் நடந்த கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும்  பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். கூடுதலாக,  கூட்டுத் தலைமைத் தளபதி ஜெனரல் மார்க் மில்லும் பங்கேற்றார்.

தொடர்ந்து ஜோ பிடன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘குண்டுவெடிப்பில் இறந்த அமெரிக்க  வீரர்கள் மாவீரர்கள்; இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்களைப்  பிடிப்போம். அவர்களை மன்னிக்க மாட்டோம்.

மறக்கவும் மாட்டோம். ஆப்கானை விட்டு  வெளியேறும் நடவடிக்கை, இம்மாத இறுதிக்குள் திட்டமிட்டப்படி முடிவடையும்.   அமெரிக்க படை வீரர்களின் மரணத்திற்கு பொறுப்பு ஏற்கிறீர்களா? என்று  கேட்கின்றனர்.

ஆனால், தாமதமாக எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கைக்கும் நான்  பொறுப்பேற்கிறேன்’ என்றார்.

கடவுளுக்கு நன்றி
காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரங்களுக்கு முன், 145 ஆப்கான் சீக்கியர்கள் மற்றும் 15 இந்துக்கள் சம்பவ இடத்தில் இருந்தனர்.

அவர்கள், இப்போது அங்குள்ள குருத்வாராவுக்குள் தஞ்சமடைந்துள்ளனர். இதுகுறித்து டெல்லி சீக்கிய குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பு நடந்த இடத்தில், சீக்கியர், இந்தியர் குழுவினர் நின்றிருந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்திருந்தால், நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது. இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்காததற்காக, நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம்.



ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பால் தலிபானுக்கு ஆபத்து
காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பிறகு ஆப்கானை கைப்பற்றிய தலிபான்  மற்றும் பாகிஸ்தான் அரசு ஆகியன கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு தீவிரவாத அமைப்பின் மீது மற்றொரு தீவிரவாத அமைப்பு பழிபோடும் விளையாட்டை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

காபூல் குண்டுவெடிப்புக்கு காரணம் தலிபான்களா?,  ஐஎஸ்ஐஎஸ்-கே தீவிரவாத அமைப்பா? என்ற கேள்விகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் வானொலிக்கு பேட்டியளித்த தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா  முஜாஹித், ‘எங்களது படையினர் தங்கியிருக்கும் இடத்திலும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. எங்களது குழுவினர் தங்கள் உயிரைப்  பணயம் வைத்து காபூல் விமான நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கும்  ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பால் ஆபத்து உள்ளது’ என்று கூறினார்.

மிகவும் காட்டுமிராண்டித்தனமானது
* ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘காபூலின் தற்போதைய நிலைமை மற்றும் குறிப்பாக விமான நிலையத்தின் நிலைமை குறித்து கவலையடைந்துள்ளேன்.

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த மக்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.


* பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வெளியிட்ட பதிவில், ‘நாங்கள் மிகவும் பதற்றமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளோம். இந்த விஷயத்தில் நாங்கள் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

விமான நிலையத்தின் நிலைமை கட்டுக்குள் வந்தபின் நாங்கள் எங்கள் மக்களை அங்கிருந்து அழைத்து வருவோம்‘ என்றார்.
* பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட பதிவில், ‘ஆப்கானில் நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது.

மக்களை அழைத்து வரும் நடவடிக்கைகளை  துரிதப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து ஐ. நா பொதுச் செயலாளர்  பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்களின் கூட்டம் இன்று கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஎஸ்ஐஎஸ்-கே என்றால் என்ன?
கடந்த 2012ம் ஆண்டில் ஈரான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ‘கோரசான்’ பகுதியில் தீவிர இஸ்லாமிய அமைப்பு உருவாக்கப்பட்டது.

இவர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, கடந்த 2014ம் ஆண்டு அவர்கள் பக்கம் சாய்ந்தனர். தொடர்ந்து, தீவிர இஸ்லாமிய அரசு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகளாவிய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில், சுமார் 20 வகையான பிரிவுகள் உள்ளன. அவற்றில் மிகவும் ஆபத்தான பிரிவுதான் ‘ஐஎஸ்ஐஎஸ்-கே’ எனப்படும் ‘கோராசன்’ பிரிவு.

இந்த ‘கோராசன்’ நெட்வொர்க் ஆனது, தெற்காசியா நாடுகளில் வலிமையாக உள்ளது. இவர்களுக்கு அல்கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர்களின் ஆசீர்வாதமும், தொழில்நுட்ப வசதிகளும், ஆயுதங்கள் கையாளும் திறனும் கொடுக்கப்படுகிறது.



‘ஐஎஸ்ஐஎஸ்-கே’ அமைப்பானது, ஆப்கானை கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பினரிடம் இருந்து வெளியேறும் தீவிரவாதிகளை, தங்களது அமைப்பில் சேர்த்து, சர்வதேச பயங்கரவாத சதிகளை அரங்கேற்றி வருகிறது. குறிப்பாக, தலிபான் அமைப்பை விட்டு வெளியேறிய தீவிரவாதிகளை, ஐஎஸ் அமைப்பினர் தளபதிகளாக ஆக்குகின்றனர்.

உஸ்பெக், தாஜிக், வெயிகர் மற்றும் செச்சன்யா நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ‘ஐஎஸ்ஐஎஸ்-கே’ பிரிவில் சேர்ந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ‘ஐஎஸ்ஐஎஸ்-கே’ பிரிவானது,  ஆப்கானிஸ்தானில் தங்களது புதிய கிளையை உருவாக்க முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


.

மூலக்கதை