பெண் உரிமை, ஊடக சுதந்திரம், பழிவாங்க மாட்டோம்... 1990ல் இருந்த தலிபான் வேற... இப்ப இருக்குற தலிபான் வேற!- ஆப்கான் அரசை கைப்பற்றிய பின் முதல் ஊடக சந்திப்பில் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெண் உரிமை, ஊடக சுதந்திரம், பழிவாங்க மாட்டோம்... 1990ல் இருந்த தலிபான் வேற... இப்ப இருக்குற தலிபான் வேற! ஆப்கான் அரசை கைப்பற்றிய பின் முதல் ஊடக சந்திப்பில் அறிவிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், முதன்முதலாக தலிபான் செய்தி தொடர்பாளர் ஊடகங்களில் அளித்த பேட்டியில், 1990களில் இருந்த தலிபான்கள் வேறு, இப்போது இருக்கும் தலிபான்கள் வேறு என்றும், சிந்தனைகளும், நம்பிக்கைகளும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆப்கானில் நுழைந்த அமெரிக்க படைகள் கிட்டதிட்ட 20 ஆண்டுகளுக்கு பின் வெளியேறி வருகின்றன.

மத அடிப்படைவாத குழுக்களான தலிபான்கள், ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ளனர். விரைவில் புதிய அரசை நிர்மாணிக்க உள்ளனர்.



அதன் தொடர்ச்சியாக முதன்முதலாக ‘டோலோ நியூஸ்’ என்ற நிறுவனத்துக்கு தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் அளித்த பேட்டியில் கூறியதாவது: பெண்களின் உரிமைகளை மதிக்கிறோம். அதேநேரம் இஸ்லாமிய சட்டவிதிகளுக்கு உட்பட்டு பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும்.

சுகாதாரத் துறை மற்றும் பெண்கள் சார்ந்த பிற துறைகளில் பணியாற்ற அனுமதிக்கப்படும். பணியிடத்தில் பெண்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் இருக்காது.

தனியார் ஊடகங்கள் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்படும். ஆனால், தேசிய கவுரவத்திற்கு எதிராக ஊடகத்தினர் செயல்பட அனுமதிக்க மாட்டோம்.

அனைத்து ஊடகங்களும் தங்கள் பணிகளை தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்.

அவர்களுக்கு மூன்று விதமான பரிந்துரைகளை வைத்துள்ளோம்.

அதாவது, எந்தவொரு ஒளிபரப்பு செய்தியும் இஸ்லாமிய கவுரவத்திற்கு முரண்பாடாக இருக்க கூடாது. பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும்.

தேசிய நலன்களுக்கு எதிரான எதையும் யாரும் ஒளிபரப்பக்கூடாது. ஆப்கானிஸ்தானை முஜாஹித் கிளர்ச்சியாளர்கள் (தலிபான்கள்) பாதுகாப்பார்கள்.

ஏற்கனவே செயல்பட்ட அரசில் அல்லது வெளிநாட்டு அரசு அல்லது படைகளில், அலுவலகங்களில் பணியாற்றியவர்களுக்கு எதிராக பழிவாங்கமாட்டோம். எந்தவொரு நாட்டிற்கும் எந்தவொரு அச்சுறுத்தலும் விடுக்க மாட்டோம்.   இதனை உலக நாடுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆப்கான் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாழ அவர்களுக்கு உரிமை உண்டு.

எனவே, மற்ற நாடுகள் இந்த விதிகளை மதிக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்திலும் மக்களின் வாழ்வாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். நாங்கள் அனைவரையும் மன்னித்துவிட்டோம்.

முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வெளிநாட்டுப் படைகளிடம் வேலை செய்தவர்கள் உட்பட எவருக்கும் எதிராக பழிவாங்கும் நடவடிக்கையை எடுக்க மாட்டோம். அவர்களின் வீட்டை சோதனை செய்ய மாட்டோம்.

கடந்த போரின் போது தற்செயலாக நடந்த சில சம்பவங்களால், மக்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பு ஏற்பட்டது. அதுபோன்ற சம்பவங்கள் வேண்டுமென்றே நடக்கவில்லை.

காபூலின் நிலைமை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும். அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு அரசை ஏற்படுத்தவும், போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தலிபான்கள் விரும்புகின்றனர்.



1990ம் ஆண்டுகளில் இருந்த தலிபானுக்கும் (பெண்கள் மீதான கடுமையான கட்டுப்பாடு, கல்லெறிதல், உறுப்பு துண்டிப்பு, சுட்டுக் கொல்லுதல்), இன்றைய தலிபானுக்கும் இடையிலான சில வேறுபாடுகள் உள்ளன. ஆனால், சித்தாந்தம் மற்றும் நம்பிக்கைகள் ஒரே மாதிரியாக உள்ளன.

அனுபவத்தின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யப்படும்’ என்றார். தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்தின் பேட்டியை பார்க்கும் போது, அவர்கள் கடந்த கால அனுபங்களின் அடிப்படையில் ‘மிதவாத’ தலிபான்களாக மாறி புதிய அரசை நிறுவ வாய்ப்புள்ளதாக சர்வதேச நிபுணர்கள் கூறியுள்ளனர்.



இதுவரை 3,200 பேர் வெளியேற்றம்
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், ‘அமெரிக்க ராணுவத்தால் இதுவரை சுமார் 3,200 பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டனர். செவ்வாயன்று மட்டும் 1,100 பேர் வெளியேற்றப்பட்டனர்.

13 விமானங்கள் மூலம் அமெரிக்க குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் 11,000 அமெரிக்க மக்கள் உள்ளனர்.

அவர்களில், தூதர்கள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர் அடங்குவர். வரும் 31ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேற உள்ளதால், ‘சி-17’ ரக போக்குவரத்து ஜெட் விமானங்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.

ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு விசயத்தில் தலிபான் தளபதிகளுடன் தொடர்பில் உள்ளோம். ஆப்கானில் இருந்து வெளியேற விரும்பும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்வதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆப்கான் பெண்கள் ஆர்ப்பாட்டம்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள்  தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ள நிலையில், அந்நாட்டு பெண்கள்  குழு தங்களது உரிமைகளைக் கோரி முதன் முதலாக காபூலில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். ஈரானிய ஊடகவியலாளர் மசிஹ் அலினேஜாட் என்பவர் தனது டுவிட்டர்  பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில், காபூலில் உள்ள ஒரு  தெருவில் நான்கு ஆப்கானிஸ்தான் பெண்கள் கையால் எழுதப்பட்ட காகித அட்டைகளை  காட்டி, தலிபான்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அவர்கள், சமூகப்  பாதுகாப்பு, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை, அரசியல் பங்கேற்பு உரிமை  உள்ளிட்ட உரிமைகளை கோருகின்றனர்.

எங்களது அடிப்படை உரிமைகளை பறிக்கக்  கூடாது’ என்று கூறுகின்றனர். பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும் என்று  தலிபான்கள் கூறிய நிலையில், அங்கு காபூலில் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்து  வருவது குறிப்பிடத்தக்கது.



சீனாவின் கனிம கொள்ளை திட்டம்
ஆப்கானில் அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியுறவு விவகாரங்கள் குழுவின் குடியரசுக் கட்சியை சேர்ந்த அதிகாரி மைக்கேல் மெக்கால் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் அரிதான கனிம வளங்கள் உள்ளன. அதை அபிவிருத்தி செய்ய, நாங்கள் (அமெரிக்க நிர்வாகம்) ஆப்கானியர்களுடன் இணைந்து வேலை செய்யாதது ஏன் என்பது தெரியவில்லை.

இப்போது, அந்த கனிம வளங்களை சீனா கைப்பற்றப் போகிறது. கனிம வளங்களை தோண்டியெடுக்க சீனா ஆப்கானிஸ்தானுக்குள் செல்லவுள்ளது.

இந்த விசயத்தில், சீனா வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிய மக்களைப் போன்றே, அமெரிக்காவும் தோல்வியுற்றது.

இதில் தலிபான்கள் லாபம் அடைந்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த திங்கட் கிழமையன்று காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேற முற்பட்டனர்.

அமெரிக்காவிற்கு சொந்தமான சி -17 சரக்கு விமானத்தை சுற்றி வளைத்த அவர்கள், விமானத்தில் இறக்கையில் தொங்கிக் கொண்டும், உள்ளே அமர்ந்தும் சென்றனர். கிட்டதிட்ட 700க்கும் மேற்பட்டோர் பயணித்த இந்த விமானத்தில், தொங்கிக் கொண்டு சென்ற சிலர் கீழே விழுந்து இறந்ததாகவும், அவர்களின் உடல் உறுப்புகள் விமானத்தின் சிதைந்து கிடந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு அலுவலகம் விசாரணை நடத்த அமெரிக்க விமானப்படை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விமானப்படை அதிகாரிகள் கூறுகையில், ‘விமானத்தில் தொங்கிக் கொண்டு வந்தவர்களில், இதுவரை எத்தனை பேர் இறந்தனர் என்பது தெரியவில்லை.

வளைகுடா நாடான கட்டாரில் உள்ள அல்-உதீத் விமானப்படை தளத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தின் சக்கரத்தில் மனித உறுப்புகளின் எச்சங்கள் சிதைந்த நிலையில் கிடந்தன.

தற்போது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றனர்.

சும்மா. காமெடி பண்ணாதீங்க!
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் போராளிகள் பெண் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது சிரித்தனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலைமை குறித்த உலகளாவிய கவலைக்கு மத்தியில், பெண் பத்திரிகையாளருக்கும், தலிபானுக்கு இடையிலான உரையாடல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அதன் விபரம் வருமாறு:
பெண் பத்திரிகையாளர்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெறும்போது, பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுமா?
தலிபான்:
பெண்களின் உரிமைகள் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி கடைப்பிடிக்கப்படும்.
பெண் பத்திரிகையாளர்:
உங்களது ஆட்சியில் பெண்கள் அரசியல்வாதிகளாக அனுமதிக்கப்படுவார்களா?
தலிபான் (சிரித்துக் கொண்டே):
உங்களது கேள்வி என்னை சிரிக்க வைக்கிறது.

கேமராவை ஆப் செய்யுங்கள். . .

நான்தான் அடுத்த அதிபர்
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ஹெலிகாப்டரில் நிறைய பணக்கட்டுகளுடன் ஓமனுக்குத் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் முல்லா ஓமரின் ஆதரவாளரான தலிபானின் முல்லா அப்துர் பர்தார் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற செய்தி வெளியானது.

இந்நிலையில், அந்நாட்டின் துணை அதிபர் அமருல்லா சலேஹ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஆப்கானின் அரசியல் சாசனத்தின்படி அதிபர் இல்லாத சமயத்திலோ அல்லது அவர் தப்பியோடிவிட்டாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ, இறந்தாலோ அந்தச் சூழலில் அதிபருக்கான பொறுப்பை துணை அதிபர்தான் ஏற்பார். நான் நாட்டிற்குள்தான் இருக்கிறேன் என்பதால், நான்தான் அடுத்த அதிபர்.

இதற்காக அனைத்து தலைவர்களையும் சந்தித்து ஆதரவுகோர உள்ளேன். தலிபான் தீவிரவாதத்துக்கு தலைவணங்கப்போவதில்லை.

என்னை நம்பியவரை என்றுமே காட்டிக்கொடுக்கப்போவதில்லை. தலிபான்களுடன் இணைந்து இருப்பது சாத்தியமே இல்லை’ என்று கூறியுள்ளார்.

வீராங்கனையின் கனவு கலைந்தது
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜகியா குடாடதி (23).

மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் பாராலிம்பிக் தொடரில்  ஆப்கானிஸ்தானில் இருந்து பங்கேற்க இருக்கும் முதல் வீராங்கனை. ஆனால், ஆப்கானிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் அசாதாரண சூழல் அவரது எதிர்காலத்தை  கேள்விக்குறி ஆக்கியுள்ளது.

டேக்வாண்டோ விளையாட்டில் பங்கேற்பதற்காக ஜகியாவும், தடகள விளையாட்டில் பங்கேற்பதற்காக ஹொசெயின் ரசவுலி என்ற வீரரும் டோக்கியோ செல்ல வேண்டும். போர் சூழலுக்கு மத்தியிலும், ஆப்கானிஸ்தானில் இருந்து ஜப்பானுக்கு விமானம் ஏறி செல்வதற்கான வாய்ப்பையும் இழந்துள்ளார்.

இவர், டோக்கியோ போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று, ஒலிம்பிக் அமைப்பும் தெரிவித்துள்ளது.

அதனால், ஆப்கானின் முதல் வீராங்கனை, கடைசி வீராங்கனையான பரிதாப சூழல் ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை