4 கார்கள் நிறைய பணத்துடன் ஹெலிகாப்டரில் தப்பிய ஆப்கான் அதிபர் ஓமன் நாட்டில் தஞ்சம்?.. ரஷ்யா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
4 கார்கள் நிறைய பணத்துடன் ஹெலிகாப்டரில் தப்பிய ஆப்கான் அதிபர் ஓமன் நாட்டில் தஞ்சம்?.. ரஷ்யா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

காபூல்: ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி, 4 கார்கள் நிறைய பணத்துடன் ஹெலி காப்டரில் ஓமன் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக ரஷ்யா வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் முழுப் பகுதியையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ள  நிலையில், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேற தொடங்கி விட்டன.   கிட்டதிட்ட 22 நாட்களில் காபூலைக் கைப்பற்றிய தலிபான்கள், ஆப்கான்  ராணுவத்தையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வரவுள்ளனர்.

கிட்டதிட்ட 3 லட்சம்  வீரர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் ராணுவம், இனி யாருடைய பக்கம் செயல்படப்  போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், காபூலில் உள்ள ரஷ்ய தூதரக செய்தித் தொடர்பாளர் நிகிதா இன்ஷ்சென்கோ வெளியிட்ட அறிவிப்பில், ‘தலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

அவர் காபூலில் இருந்து நான்கு கார்கள் நிறைய பணம் மற்றும் ஒரு ஹெலிகாப்டருடன் சென்றார். தற்போது அவர் எங்கே இருக்கிறார்? என்பது யாருக்கும் தெரியாது.

இருப்பினும், அவர் ஓமான் நாட்டில் தஞ்சம் புகுந்ததாக கூறப்படுகிறது. தஜிகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகள், தங்கள் நாட்டுக்கு அஷ்ரப் கனி வர அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளன.

ஆபத்தான நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய அதிபர் மீது வழக்கு தொடர வேண்டும்’ என்று அந்த அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

நாட்டைவிட்டு வெளியேறிய அஷ்ரப் கானி, ஓமன் நாட்டின் வழியாக அமெரிக்கா செல்லத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா முகமதி வெளியிட்ட பதிவில், ‘அவர் (ஜனாதிபதி) எங்களது கைகளை எங்களின் முதுகின் பின்னால் கட்டிப்போட்டுவிட்டு தாய்நாட்டை விற்றுவிட்டார்கள்’ என்று கூறியுள்ளார். மேலும், ஆப்கானிஸ்தானின் மூத்த தலைவரும், தேசிய நல்லிணக்கத்துக்கான உயர் கவுன்சிலின் தலைவருமான அப்துல்லா வெளியிட்ட வீடியோ கிளிப்பில், ‘ஆப்கானிஸ்தான் மக்களை துன்பத்திலும் துயரத்திலும் அஷ்ரப் கனி ஆழ்த்தியுள்ளார்’ என்று கூறியுள்ளார்.

இக்கட்டான இந்த நேரத்தில், ஆப்கானில் இருந்து அஷ்ரப் கனி வெளியேறியது, சர்வதேச சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

ரத்தம் சிந்துவதை தடுக்கவே. . !
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு சற்று முன்பு, அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி  பேஸ்புக் மூலம் வெளியிட்ட பதிவில், ‘நாட்டு மக்கள் ரத்தம் சிந்துவதைத்  தடுக்கவே வெளியேறுகிறேன்.

இங்கு தங்கியிருந்தால், எனது ஆதரவாளர்கள்  தெருக்களுக்கு வந்து போராடுவார்கள். தலிபான்கள் அவர்களுக்கு எதிராக வன்முறையை  கட்டவிழ்த்துவிடுவார்கள்.

ஆயிரக்கணக்கான மக்களின் ரத்தம்  சிந்தப்படும். இதனை நான் விரும்பவில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.


.

மூலக்கதை