129 இந்தியர்களை மீட்க டெல்லியில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்ற இந்திய விமானம் காபூலில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
129 இந்தியர்களை மீட்க டெல்லியில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்ற இந்திய விமானம் காபூலில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

* விமானங்களில் தப்பிச்செல்ல வெளிநாட்டினர் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பதற்றம்
* ஐ. நா-வில் இன்று அவசர ஆலோசனை; ஆப்கானுக்கான இந்திய தூதர் டுவிட்டர் ‘ஹேக்’

புதுடெல்லி: டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், காபூலில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் 129 பேர்  இந்தியா வந்து சேர்ந்தனர்.

காபூலில் இருந்து தப்பிச் செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்தில் குவிந்துள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியானதை அடுத்து, தலிபான்கள் பெரும்பான்மையான மாகாணங்களை கைப்பற்றினர்.

தலைநகர் காபூலையும் கைப்பற்றி உள்ளனர். இதனால், அந்நாட்டு அதிபர்  பதவியை ராஜினாமா செய்த அஷ்ரப் கனி, தஜிகிஸ்தானுக்கு தப்பியோடியதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆட்சி அதிகாரம் அவர்கள் வசம் செல்வதால் அங்குள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதரக ஊழியர்களை வெளியேற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

காபூலில் இருந்து இந்தியர்களையும், இந்திய தூதரக ஊழியர்களையும் அவசரமாக அழைத்து வருவதற்காக இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் ராணுவ சரக்கு விமானம் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், காபூலில் சிக்கித் தவித்த 129 இந்தியர்களை  மீட்டு வருவதற்காக, ‘ஏர் இந்தியா போயிங் 777’ என்ற விமானம் நேற்று  டெல்லியில் இருந்து புறப்பட்டது.28,000 அடி உயரத்தில் பறந்த இந்த விமானம்  காபூல் விமான நிலையத்தின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தில்  (ஏடிசி) தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. காரணம், ஏற்கனவே அங்கொரு விமானம்  ஓடுபாதையில் ஆபத்தான நிலையில் இருந்தது.

அதனால் இந்திய விமானம் உடனடியாக  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனால்,  உரிய நேரத்தில் இந்தியர்களை அழைத்து வரமுடியாத சூழல் ஏற்பட்டது.   இதற்கிடையே மற்றொரு ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று இரவு 129 இந்தியர்களும் டெல்லிஅழைத்து வரப்பட்டனர்.   எல்லாவற்றிற்கும் மேலாக,  ஆப்கானிஸ்தானில் நடக்கும் விசயங்களை இந்திய அரசு உன்னிப்பாகக்  கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே, காபூல் உள்ளிட்ட பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், விமான நிலையங்களை தலிபான்கள் நெருங்கக் கூடாது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல மக்கள் விமான நிலையங்களில் குழுமியுள்ளனர்.

மற்ற நாடுகளும் தங்கள் நாட்டு மக்கள், தூதரக அதிகாரிகளை தனி விமானம் மூலம் அழைத்து வருகின்றனர். குறிப்பிட்ட விமானத்தில் தப்பி செல்வதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் விமானத்தின் படிகளில் தொங்கியபடி தள்ளுமுள்ளுவுடன் ஏறினர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறது.

எஸ்டோனியா, நார்வே ஆகிய நாடுகளின் வேண்டுகோளை ஏற்று ஐநா இந்த கூட்டத்தை நடத்துகிறது. ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரேஸ் கவுன்சில் உறுப்பினர்களுக்கு ஆப்கானிஸ்தான் நிலை குறித்து விளக்குவார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் உடனடியாக தாக்குதலை நிறுத்துமாறும் உள்நாட்டு போரை தடுக்க பேச்சுவார்த்தை நடத்துமாறும் கடந்த வெள்ளிக்கிழமை ஐநா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் செய்தி செயலாளர் அப்துல்ஹக் ஆசாத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் திடீரென ‘ஹேக்’ செய்யப்பட்டது.

அதனால், அந்நாட்டு அரசாங்கத்திடம் நேரடி தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


.

மூலக்கதை