வட அமெரிக்காவின் கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் பயங்கர நிலநடுக்கம்; 304 பேர் பலி: 2,000க்கும் மேற்பட்டோர் படுகாயம்; மீட்புப் பணிகள் தீவிரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வட அமெரிக்காவின் கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் பயங்கர நிலநடுக்கம்; 304 பேர் பலி: 2,000க்கும் மேற்பட்டோர் படுகாயம்; மீட்புப் பணிகள் தீவிரம்

போர்ட்-ஓ-பிரின்ஸ்: ஹைதி நாட்டில் ஏற்பட்ட சக்திய்வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக 304 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதி நாட்டில் சனிக்கிழமையன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7. 2 ஆக பதிவான இந்த நிலநடுக்கமமானது ஹைதியின் தலைநகரான போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

இடிபாடுகளில் சிக்கி 304 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டதிட்ட 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அந்நாட்டு பிரதமர் ஏரியல்  ஹென்றி விரைந்துள்ளார். நாடு முழுவதும் ஒரு மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் பாதிப்பு தொடர்பாக முழு விபரம் தெரியும்வரை சர்வதேச உதவிகளை கோரப்போவதில்லை என்று அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது.

அமெரிக்காவின் அலாஸ்காவிலும் 6. 9 ரிக்டர் அளவுகோல் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹைதி நிலநடுக்கத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   அர்ஜெண்டீனா, சிலி போன்ற நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன.

கடந்த 2010ம் ஆண்டு ஹைதியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்திற்கு பின்னர், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

2010ம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவான நிலையில், அப்போது மீட்பு நடவடிக்கை தாமதமானதால் சுமார் 3 லட்சம் பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை