நீதிமன்ற உத்தரவால் தடகள போட்டியில் பங்கேற்க போலந்து செல்கிறார் குமரி மாணவி: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மக்கள் மகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
நீதிமன்ற உத்தரவால் தடகள போட்டியில் பங்கேற்க போலந்து செல்கிறார் குமரி மாணவி: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மக்கள் மகிழ்ச்சி

நாகர்கோவில்: நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தடகள போட்டியில் பங்கேற்க குமரி மாணவி போலந்து செல்கிறார். குமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் முஜீப்.

ஓட்டல் தொழிலாளி. அவரது மகள் சமீஹா பர்வீன் (18).

7 வயதாக இருக்கும் போது ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக காது கேட்கும் திறனை இழந்ததுடன், பேசும் திறனையும் இழந்தார். அவரது மருத்துவத்திற்காக சொந்த வீட்டை விற்று பல லட்ச ரூபாய் செலவு செய்துள்ளனர்.

சமீஹா பர்வீன் பள்ளியில் படிக்கும் போது அவருக்கு தடகள விளையாட்டில் இருந்த ஆர்வத்தை அவரது ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து முறையாக தடகள விளையாட்டுகளான நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்டவைகளில் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சமீஹா பர்வீன் பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் வெற்றி பெற்றார். கடந்த 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்று 9 தங்கம் உள்பட 12 பதக்கங்களை சமீஹா பர்வீன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் போலந்து நாட்டில் இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் சர்வதேச செவித்திறன் குன்றியவர்களுக்கான (டெப் அத்லெட்டிக்ஸ்) தடகளப் போட்டிகளில் பங்கேற்க சமீஹா பர்வீன் தேர்வாகியுள்ளார் என தமிழ்நாடு டெப் அயோசியேசனில் இருந்து கடந்த ஜூலை 16ம் தேதி சமீஹா பர்வீனுக்கு கடிதம் வந்தது.

மேலும் அந்தக் கடிதத்தில் டெல்லியில் ஜூலை 22ம் தேதி நடைபெறும் தகுதித் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.   இதையடுத்து சமீஹா பர்வீன் டெல்லிக்குச் சென்று தகுதி தேர்வில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெற்று தகுதி பெற்றார். இத்தகுதித் தேர்வில் வேறு எந்த வீராங்கனைகளும் தேர்வாகவில்லை.

இதனால் தேர்வான சமீஹா பர்வீன் நிராகரிக்கப்பட்டார். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சமீஹா பர்வீன், போட்டியில் பங்கேற்க அரசு ஆவன செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நேற்று இரவே சமீஹா பர்வீன் டெல்லி புறப்பட்டு சென்றார்.

நாளை (15ம்தேதி) ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து நீதிமன்ற உத்தரவை சமர்ப்பிக்கிறார்கள்.

பின்னர் ஒரு வாரம் டெல்லியில் பயிற்சி மற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன.

போலந்தில் இந்த மாதம் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கும் போட்டியில் பங்கேற்க அவர் செல்கிறார். சமீஹா பர்வீனுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து கடையாலுமூடு பகுதியில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

நீளம் தாண்டுதலில் இதுவரை 4. 2 மீட்டர் தான் உலக சாதனையாக உள்ளது. ஆனால் சமீபத்தில் டெல்லியில் நடந்த அரையிறுதி போட்டியில் சமீஹா பர்வீன் 5 மீட்டர் நீளம் தாண்டி சாதனை படைத்தார்.

போலந்தில் நடக்கும் போட்டியில் உலக சாதனை படைப்பார் என அவரது பயிற்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். நீளம் தாண்டுதலில் இதுவரை 4. 2 மீட்டர் தான் உலக சாதனையாக உள்ளது.

ஆனால்  சமீபத்தில் டெல்லியில் நடந்த அரையிறுதி போட்டியில் சமீஹா பர்வீன் 5 மீட்டர்  நீளம் தாண்டி சாதனை படைத்தார்.

.

மூலக்கதை