5 தேசிய கட்சிகள் பெற்றதை விட பாஜ.வுக்கு 3 மடங்கு நன்கொடை அதிகம்: மாநகராட்சியே நிதி கொடுத்தது அம்பலம்

தினகரன்  தினகரன்
5 தேசிய கட்சிகள் பெற்றதை விட பாஜ.வுக்கு 3 மடங்கு நன்கொடை அதிகம்: மாநகராட்சியே நிதி கொடுத்தது அம்பலம்

புதுடெல்லி: காங்கிரஸ் உள்ளிட்ட 5 தேசிய கட்சிகளை விட, பாஜ 3 மடங்கு அதிகமாக நன்கொடை பெற்றுள்ளது.தேசிய கட்சிகளாக அங்கீகாரம் பெற்ற பாஜ, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 6 கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் பெறும் நன்கொடை குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும். அந்த வகையில், 2019-20ம் ஆண்டுக்கான நன்கொடை தகவல்களை அளித்துள்ளன. அதில், காங்கிரஸ் உள்ளிட்ட 5 எதிர்க்கட்சிகள் பெற்ற ஒட்டுமொத்த நன்கொடையை விட பாஜ.வின் நன்கொடை 3 மடங்கு அதிகமாக இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:2019-20ம் நிதியாண்டில் காங்கிரஸ் உள்ளிட்ட 5 எதிர்க்கட்சிகள் பெற்ற ஒட்டு மொத்த நன்கொடை ரூ.228.035 கோடி. ஆனால், பாஜ மட்டுமே ரூ.785.77 கோடி கட்சி நிதி பெற்றுள்ளது. மகாராஷ்டிராவின் அமராவதி மாநகராட்சி கூட பாஜ.வுக்கு ரூ.4.80 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளது. அந்த மாநகராட்சியின் மேயர், துணை மேயர் இருவருமே பாஜவை சேர்ந்தவர்கள். அந்த நிதிக்கான எந்த தகவலையும் பாஜ வழங்கவில்லை. இதே போல், பாஜவுக்கு 3 நன்கொடையாளர்கள் நிலங்களை வழங்கி உள்ளனர். இந்த நன்கொடையாளர்களின் பெயர், முகவரி, பான் விவரங்கள் எதுவும் பாஜ தரவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதில், மாநகராட்சியே பாஜவுக்கு நன்கொடை தந்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.விடுபட்ட தகவலுடன் 150 கோடி காசோலைகட்சிகளுக்கு நன்கொடையாக தரப்பட்ட சில காசோலைகளில் தேதி, வங்கி கணக்கு விவரம் என சில முக்கிய தகவல்கள் விடுபட்டுள்ளன. அதுபோல், பாஜ,வுக்கு வழங்கப்பட்டதில் 570 காசோலைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாதவை. அதன் மூலம், ரூ.149.875 கோடி கிடைக்க வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட நன்கொடையாளர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூலக்கதை