உள்நாட்டில் உருவான விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் சோதனை ஓட்டம்

தினகரன்  தினகரன்
உள்நாட்டில் உருவான விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் சோதனை ஓட்டம்

* ஐஎன்எஸ் விக்ராந்த்தின் மொத்த தயாரிப்பு பட்ஜெட் ரூ.23 ஆயிரம் கோடி.* இந்த கப்பல் 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் கொண்டது. * இதில், மிக் 29கே போர் விமானங்கள், கேஏ-31 ஹெலிகாப்டர்கள் இடம் பெறும். * மொத்தம் 30 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை நிறுத்த முடியும்.புதுடெல்லி: முதன் முதலாக உள்நாட்டிலேயே கட்டப்பட்ட விமானம் தாங்கி கப்பலான, ‘ஐஎன்எஸ் விக்ராந்த்,’ நேற்று சோதனை ஓட்டத்தை தொடங்கியது. ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் கட்டுமான பணிகள் கடந்த 2009ம் ஆண்டு தொடங்கின. கொச்சி கடற்படை தளத்தில் இது தயாரிக்கப்பட்டு வந்தது. தற்போது, கப்பல் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, கடற்படையில் கப்பலை இணைப்பதற்கான நடவடிக்கைகைள் தொடங்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக, 40 ஆயிரம் டன் எடை கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. இது குறித்து இந்த கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் விவேக் மேத்வால் கூறுகையில், ‘‘இது, இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். அதிநவீன விமானம் தாங்கி கப்பலை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கும் திறன் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு மற்றும் கட்டப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பல் இதுவாகும். தன்னிறைவு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா முயற்சிக்கான ஒரு வரலாற்று தருணமாகும். அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் ஐஎன்எஸ் விக்ராந்த் கடற்படையில் இணைக்கப்படும்,” என்றார்.

மூலக்கதை