டெல்லியில் கூட்டு பலாத்காரம் செய்து சிறுமி கொலை நீதி கிடைக்கும் வரை உடன் இருப்பேன்: பெற்றோரை சந்தித்து ராகுல் உறுதி

தினகரன்  தினகரன்
டெல்லியில் கூட்டு பலாத்காரம் செய்து சிறுமி கொலை நீதி கிடைக்கும் வரை உடன் இருப்பேன்: பெற்றோரை சந்தித்து ராகுல் உறுதி

புதுடெல்லி: டெல்லியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட சிறுமியின் பெற்்றோரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, ‘சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்கும் வரை உடனிருப்பேன்,’ என்று அவர்களிடம் தெரிவித்தார்.  டெல்லியின் நங்கால் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்த 9 வயது சிறுமி, சுடுகாட்டில் இருக்கும் குளிரூட்டியில் இருந்து  தண்ணீர் எடுத்து வருவதற்காக தனியாக சென்றுள்ளார். வீட்டில் பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அங்கு இருக்கும் பூசாரி உட்பட 4 பேர் சிறுமியின் தாயாரை அழைத்துள்ளனர். தண்ணீர் குடிக்கும்போது மின்சாரம் தாக்கி சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், வெளியே தகவல் தெரிந்தால் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்வார்கள், சிறுமியின் உடல் உறுப்புக்களை திருடி விற்றுவிடுவார்கள் என கூறி சிறுமியின் தாயாரின் அனுமதி இன்றி சடலத்தை எரித்துள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் அங்கிருந்த பூசாரி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தலைநகர் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘‘சிறுமியின்  பெற்றோர் கேட்பது ஒன்றுமில்லை. நீதியை மட்டும்தான். அவர்கள் அதனை பெறவில்லை. அதற்கான அனைத்து உதவிகளும் அவர்களுக்கு தேவை. அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இந்த ராகுல் காந்தி அவர்களோடு இருப்பான். ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டேன் என உறுதி அளித்துள்ளேன். அவர்களுக்கு உதவி செய்வதுதான் எனது வேலை,” என்றார். இது குறித்து ராகுல் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சிறுமியின் பெற்றோரின் கண்ணீர் ஒன்றை மட்டும்தான் கூறுகின்றது. அவர்களின் மகள், இந்த நாட்டின் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதிக்கான இந்த பயணத்தில் நான் அவர்களுடன் இருப்பேன்,’ என்று கூறியுள்ளார். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘9 வயது சிறுமியை பாலத்காரம் செய்து கொடூரமாக எரித்து கொன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என குறிப்பிட்டுள்ளார். போட்டோ வெளியிட்டது தவறு ராகுல் மீது பாஜ குற்றச்சாட்டுபாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா அளித்த பேட்டியில், ‘தாழ்த்தப்பட்ட சிறுமியின் குடும்பத்தை ராகுல் காந்தி சந்தித்தது, நீதி கிடைக்க வேண்டும் என்று கூறியதில் எந்த பிரச்னையும் இல்லை. காந்தி குடும்பத்தின் சந்தர்ப்பவாதம்தான் கண்டனத்துக்குரியது. அவர்கள், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், பஞ்சாப், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் அக்கிரமங்கள் குறித்து ஒரு வார்த்தை பேசுவது கிடையாது. சிறுமியின் பெற்றோரின் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டது மூலம்,  அவர் சட்ட விதிகளை மீறி இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை பகிரங்கப்படுத்துவது குற்றமாகும்,’’ என்றார். நீதி விசாரணைடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறுமியின் பெற்றோரை நேற்று சந்தித்தார். அப்போது, போராட்டக்காரர்கள் அவரை சூழ்ந்து கண்டன கோஷம் எழுப்பினார்கள். கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், ‘நமது மகள் திரும்ப வரமாட்டாள். அந்த குடும்பத்துக்கு அநீதி இழைக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. அதை எதனாலும் ஈடு செய்ய முடியாது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு டெல்லி அரசு ரூ.10 லட்சம் உதவி தொகை வழங்குகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதற்கு டெல்லி அரசே வழக்கறிஞர்களை நியமிக்கும்,” என்றார். காஷ்மீர் பயணம்ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறுவரையறை பணிகள் நடந்து வருகின்றன. இது முடிந்ததும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என கருதப்படுகிறது. இந்நிலையில், இங்கு காங்கிரசை பலப்படுத்தும் விதமாக, வரும் 9ம் தேதி ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.

மூலக்கதை