தொடர் மழை, வெள்ளத்தால் மேற்கு வங்கம், மபி. தத்தளிப்பு: 3 லட்சம் மக்கள் வெளியேற்றம்

தினகரன்  தினகரன்
தொடர் மழை, வெள்ளத்தால் மேற்கு வங்கம், மபி. தத்தளிப்பு: 3 லட்சம் மக்கள் வெளியேற்றம்

புதுடெல்லி: மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையில் 200 கிராமங்கள் சிக்கி தவித்து வருகின்றன.மேற்கு வங்கத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கனமழை தொடர்கிறது. மேலும், தாமோதர் பள்ளத்தாக்கு, துர்காபூர் அணைகள் திறக்கப்பட்டதால் 6 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தின் மூழ்கியுள்ளன.  3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். ஹவுரா மாவட்டத்தில் உள்ள உதய்நாராயண்பூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மம்தா பானர்ஜி பார்வையிட்டார். மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் குறித்து பிரதமருக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றார். இந்நிலையில், மழை பாதிப்புகள் பற்றி மம்தாவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தேவையான அனைத்து உதவிகளையும்  ஒன்றிய அரசு செய்து தரும் என்றும் உறுதி அளித்துள்ளார்.  இதேபோல், மத்தியப் பிரசேதத்திலும் தொடர் மழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குவாலியர் -சம்பால் பிராந்தியத்தில் 1,171 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஷியோபூர், ஷிவ்புரி மாவட்டங்கள் தத்தளித்து வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புபணி நடக்கிறது. இம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தொலைபேசியில் அழைத்து, மழை பாதிப்பு நிலவரங்களை கேட்டறிந்தார்.

மூலக்கதை