யாரு! மாநகராட்சி செய்த 'டுவிட்டு'க்கு.....கோவை மக்கள் கோப 'கமென்ட்'

தினமலர்  தினமலர்
யாரு! மாநகராட்சி செய்த டுவிட்டுக்கு.....கோவை மக்கள் கோப கமென்ட்

கோவை : 'கொரோனா பரவல் தடுக்க, இன்னும் நிறைய சார்பட்டா பரம்பரை மாரியம்மா, பாக்கியம் தேவை' என, வித்தியாசமான முறையில், கோவை மாநகராட்சி, 'டுவிட்' செய்திருந்தது. அதற்கு, 'உங்க, தாத்தாவா சோறு போடுவான்' என, பொதுமக்கள் தரப்பில், 'கமென்ட்' விழுந்திருக்கிறது.
கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், தமிழக அளவில், கோவையே இன்னும் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக, தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்திருப்பதால், மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், மக்களிடம் அலட்சியம் தொடர்வதால், சில நாட்களாக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், மாநகராட்சி நிர்வாகம் செய்திருந்த, 'டுவிட்', சமூக வலைதளத்தில் இருப்போரை சிரிக்க வைத்தது.

மாரியம்மாவும் பாக்கியமும்!அதாவது, சமீபத்தில் திரைக்கு வந்த, 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம், பல தரப்பிலும் பேசப்படுகிறது. அதில், மாரியம்மா மற்றும் பாக்கியம் கேரக்டர்கள் மிக முக்கியமானவை.அவ்விருவரும், கதாநாயகன் வீட்டை விட்டுச் செல்லக்கூடாது என்பதை, கண்டிப்பான வார்த்தைகளால், எச்சரிக்கும் காட்சிகளை தேர்ந்தெடுத்து, 'கொரோனா பரவல் தடுக்க, கோவை மாநகராட்சிக்கு இன்னும் நிறைய மாரியம்மா, பாக்கியம் தேவை' என, மாநகராட்சி நிர்வாகம், 'டுவிட்' செய்திருக்கிறது.ஆனால், இது, மக்கள் மத்தியில் பெரிய அளவில், தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 399 பேரே, 'லைக்' செய்திருக்கின்றனர்.

இதில், 67 பேர், மற்றவர்களுக்கு 'ஷேர்' செய்திருக்கின்றனர். 11 பேர் 'கமென்ட்' செய்துள்ளனர். 'ஸ்மைலி சிம்பல்' பதிவு செய்திருந்தனர்.யார் சோறு போடுவது!ஒருவர், 'உங்க, தாத்தாவா சோறு போடுவான்' என, 'கமென்ட்' பதிவிட்டிருந்ததோடு, காமெடி நடிகர் வடிவேலு வீடியோவை இணைத்துள்ளார் சிலர், கடுமையான வார்த்தைகளை பதிவிட்டிருந்தனர்.கடந்த சில நாட்களாக, கொரோனா தடுப்பூசி முகாம் போடும் இடங்களை, 'பேஸ்புக்' மற்றும் 'டுவிட்டரில்' வெளியிடும் பழக்கத்தை, மாநகராட்சி கையாள்கிறது.

தற்போது பதிவிட்டுள்ள டுவிட்டரில் இருந்து, மக்களிடம் எந்தளவுக்கு மாநகராட்சி அறிவிப்பு சென்றடைகிறது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அதனால், வெளிப்படைத்தன்மையோடு ஒரு நாள் முன்னதாக, அனைத்து தரப்பு மக்களும் அறியும் வகையில், தடுப்பூசி போடும் இடங்களை, நாளிதழ்களில் வெளியிட வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

மூலக்கதை