அகற்றப்படுமா?: பிரளயகாலேஸ்வரர் கோவில் திருக்குள ஆக்கிரமிப்பு...மவுனம் காத்து வரும் அறநிலையத்துறை அதிகாரிகள்

தினமலர்  தினமலர்
அகற்றப்படுமா?: பிரளயகாலேஸ்வரர் கோவில் திருக்குள ஆக்கிரமிப்பு...மவுனம் காத்து வரும் அறநிலையத்துறை அதிகாரிகள்

பெண்ணாடத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத தேர் திருவிழா வெகு விமர்சையாக நடக்கும்.தேரோட்டத்தின் மறுநாள் கோவிலின் அருகிலுள்ள ஒரு ஏக்கர் 78 சென்ட் பரப்பிலான திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கும்.தேர் திருவிழாவின்போது, அரியலுார், பெரம்பலுார், சேலம், தர்மபுரி மாவட்ட கிராம மக்களும்; பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடுவர்.கடந்த ஐம்பது ஆண்டுகளாக திருக்குளம் பராமரிப்பின்றி செடிகள், கொடிகள், சம்பு, கோரைப்புற்கள் அதிகளவில் மண்டியும்; குளத்தை சுற்றிலும் தனி நபர்கள் பலர் ஆக்கிரமித்து வீடு, கடைகளை கட்டி, கழிவுநீரை குளத்திற்குள் விட்டு வருகின்றனர்.

இதனால், திருக்குளத்தின் புனிதத்தன்மை பாழாகி வருவதாக பக்தர்கள் பலமுறை இந்துசமய அறநிலையத்துறைக்கு புகார் தெரிவித்தனர்.கடந்த 2014 மார்ச் மற்றும் 2015 ஜனவரி மாதம் என இரு முறை இந்து சமய அறநிலையத்துறையின் அப்போதைய விழுப்புரம் இணை ஆணையர் செந்தில்வேலன் தலைமையிலான அதிகாரிகள் குளத்தை பார்வையிட்டு, துார் வாரி, ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டார்.அப்போதைய கோவில் செயல் அலுவலர் கொளஞ்சி முன்னிலையில், அந்த மாதமே ஆக்கிரமிப்பாளர்களுக்கு குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பிறகு 6 ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதுநாள் வரை மவுனம் காத்து வருகின்றனர்.தமிழகத்தில் பழமை வாய்ந்த கோவில்களை அதன் பழமை மாறாமல் புதுப்பித்து, அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் செய்து வரும் நிலையில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரளயகாலேஸ்வரர் கோவில் திருக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகள் முன் வராதது, பக்தர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, கோவில் திருக்குளத்தை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட அறநிலையத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.பக்தர்கள் நம்பிக்கைதிட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவிலின் திருக்குளத்தை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் சமீபத்தில் அகற்றப்பட்டது. இது சுற்றியுள்ள கிராம மக்கள், பக்தர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோன்று, பிரளயகாலேஸ்வரர் கோவில் திருக்குள ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்ற முன் வருவார்கள் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை