சபாஷ்:கல்வராயன்மலையில் நடமாடும் கற்பித்தல் திட்டம்...மாணவர்கள் உற்சாகம்; பெற்றோர்கள் வரவேற்பு

தினமலர்  தினமலர்
சபாஷ்:கல்வராயன்மலையில் நடமாடும் கற்பித்தல் திட்டம்...மாணவர்கள் உற்சாகம்; பெற்றோர்கள் வரவேற்பு

கச்சிராயபாளையம்-கல்வராயன்மலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் நடமாடும் கற்பித்தல் திட்டம் மூலம் மாணவர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று பாடம் கற்பிப்பதை பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.

மாணவர்களும் உற்சாகத்துடன் பாடம் கற்கின்றனர்.கல்வராயன்மலையில் அரசு பழங்குடியினர் நலத்துறை சார்பில் 26 ஆரம்ப பள்ளிகளும், 13 நடுநிலைப் பள்ளிகளும், இன்னாடு, கொட்டபுத்துார், மூலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 3 உயர் நிலைப் பள்ளிகளும், மணியார்பாளையம் மற்றும் கோமுகி அணை ஆகிய இடங்களில் 2 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன.ஆரம்ப பள்ளிகளில் 1,800 மாணவர்கள், நடுநிலைப் பள்ளிகளில் 1,650 மாணவர்கள், உயர் நிலைப் பள்ளிகளில் 1,204 மாணவர்கள், மேல் நிலைப் பள்ளிகளில் 1,251 மாணவர்கள் என கல்வராயன்மலையில் மொத்தம் 5,905 மாணவர்கள் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 2019 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அரசு பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்வு அறிவித்ததைத் தொடர்ந்து தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.மேலும், அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டு அதன் மூலமும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.ஆனால் கல்வராயன் மலையில் முறையான தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.கல்வராயன்மலையில் உள்ள கிராமங்களில் போதிய இணைய வசதிகள் இல்லை. குறிப்பாக மொபைல்போனுக்கே முறையான டவர் வசதிகள் இங்கு ஏற்படுத்தவில்லை. மேலும் இப்பகுதி மக்களின் பின் தங்கிய பொருளாதார சூழலால் இங்குள்ள மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.இந்தநிலையில் ஆன்லைன் வகுப்பு என்பது இப்பகுதியில் பெயரளவில் மட்டுமே உள்ளது. நகர் பகுதி மற்றும் கல்வராயன்மலையின் கீழ் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பெரும்பகுதி பாடங்களை படித்து வருகின்றனர்.ஆனால் கல்வராயன்மலை பகுதியில் உள்ள பழங்குடியினர் நலத்துறை பள்ளி மாணவர்கள் தற்போது வரை கிராமங்களில் கால்நடைகளை மேய்த்தல் மற்றும் கூலி வேலைக்குச் செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் சிலர் கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு தங்கள் பெற்றோர்களுடன் கூலி வேலைகளுக்கும், பெரு நகரங்களில் கட்டட பணிகளுக்கும் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்திகள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் நடமாடும் கற்பித்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.அதன் மூலம் கல்வராயன்மலையில் உள்ள நலத்துறை பள்ளி ஆசிரியர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று பாடம் நடத்தி வருகின்றனர். மலை கிராமங்களுக்கு ஆசிரியர்கள் நேரில் வந்து பாடம் நடத்துவதை பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.

மாணவர்களும் உற்சாகத்துடன் படிக்கின்றனர். நடமாடும் கற்பித்தல் திட்டத்தை பள்ளிகள் திறக்கும் வரை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இதனை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மூலக்கதை