ஈட்டி எறிதலில் சாதனை; இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி: தகுதி சுற்றில் முதலிடம் பிடித்து அசத்தினார்

தினகரன்  தினகரன்
ஈட்டி எறிதலில் சாதனை; இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி: தகுதி சுற்றில் முதலிடம் பிடித்து அசத்தினார்

டோக்கியோ: ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று, சாதனை படைத்துள்ளார். இன்று காலை நடந்த 16 வீரர்கள் பங்கேற்ற தகுதி சுற்றுப் போட்டியில் அவர் முதலிடத்தை பிடித்து அசத்தினார். டோக்கியோ ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் இன்று காலை ஆடவர் ஈட்டி எறிதலுக்கான தகுதி சுற்றுப் போட்டிகள் நடந்தன. பல்வேறு நாடுகளை சேர்ந்த 16 வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 86.65 மீ தொலைவு ஈட்டி எறிந்து, முதலிடத்தை பிடித்தார். 86.64 மீ தொலைவு ஈட்டி எறிந்த ஜெர்மனியின் ஜோஹானஸ் வெட்டர் 2ம் இடத்தையும், 84.50 மீ தொலைவை எட்டிய பின்லாந்தின் லஸ்ஸி எடலாடலோ 3ம் இடத்தையும் பிடித்தனர். நீரஜ் சோப்ரா உட்பட இவர்கள் 3 பேரும், ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் ஒருவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தகுதி சுற்றில் முதலிடத்தை பிடித்து, இந்த சாதனையை எட்டியுள்ள நீரஜ் சோப்ரா, ஹரியானா மாநிலம் சண்டிகரை சேர்ந்தவர். 23 வயதான இவர், இந்திய ராணுவத்தில் சுபேதார் ரேங்கில் இளநிலை அதிகாரியாக பணிபுரிகிறார். இன்று நடந்த தகுதி சுற்றுப் போட்டியில் 86.65 மீ தொலை இவர் ஈட்டி எறிந்துள்ளார். ஆனால் இவர் 88.07 மீ தொலைவை எட்டி, தேசிய சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். அதே ஆண்டு கோல்ட் கோஸ்ட்டில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றார். தவிர கடந்த 2017ம் ஆண்டு ஒடிசா, புவனேஸ்வரில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றார். மேலும் கடந்த 2016ம் ஆண்டு கவுஹாத்தியில் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டிகளிலும், அதே ஆண்டு அதற்கு முன்னதாக போலந்தில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச ஜூனியர் விளையாட்டு போட்டிகளிலும் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல், 87.86 மீ தொலைவு ஈட்டி எறிந்து, இந்தியாவில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் வீரர்களின் பட்டியலில் நீரஜ் சோப்ரா இடம் பிடித்தார். மேலும் இது இவரது முதலாவது ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது.

மூலக்கதை