எண்ணெய் கப்பல் மீதான தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம்: ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
எண்ணெய் கப்பல் மீதான தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம்: ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு

பெல்ஜியம்: 'இஸ்ரேல் எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம்' என, நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.


லண்டனில் செயல்பட்டு வரும் இஸ்ரேலைச் சேர்ந்த ஸோடியாக் மரிடைம் நிறுவனத்தின் எம்வி மெர்சிர் ஸ்ட்ரீட் என்ற எண்ணெய்க் கப்பல், ஓமனுக்கு அருகே அரபிக் கடலில் கடந்த ஜூலை 29ம் தேதி சென்ற போது தாக்குதலுக்கு உள்ளானது. இதில் இரு கப்பல் பணியாளர்கள் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் பிரிட்டனைச் சோ்ந்தவர்; மற்றொருவர் ருமோனியா நாட்டவர்.


இதுகுறித்து நேட்டோ செய்தித் தொடர்பாளர் டைலன் ஒயிட் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எம்வி மெர்சிர் ஸ்ட்ரீட் எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது. கடல்வழி போக்குவரத்து சுதந்திரத்தை நேட்டோ எப்போதும் வலியுறுத்தி வருகிறது. இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம், பிராந்திய நிலைத்தன்மையை ஈரான் குலைக்கிறது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஆணைய செய்தித் தொடர்பாளர் நபிலா மஸ்ரலி, 'கடல் போக்குவரத்து சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் ஈரான் மேற்கொள்ளும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது' என்றார்.

ஈரான்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. எனினும், ஈரான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை