ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா ஏமாற்றம்: 3வது இடத்துக்கு நாளை மோதல்

தினகரன்  தினகரன்
ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா ஏமாற்றம்: 3வது இடத்துக்கு நாளை மோதல்

டோக்கியோ: ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் நடப்பு உலக சாம்பியன் பெல்ஜியத்திடம் 2-5 என்ற கோல் கணக்கில் போராடி தோற்ற இந்தியா, வெண்கல பதக்கத்துக்காக நாளை ஜெர்மனியுடன் மோதுகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நேற்று நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா (5வது ரேங்க்) - பெல்ஜியம் (2வது ரேங்க்) அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் பெல்ஜியம் வீரர்  லூயிக் ஃபேனி  கோலடித்தார். பதில் தாக்குதல் நடத்திய இந்திய அணிக்கு 7வது நிமிடத்ததில் ஹர்மன்பிரீத் சிங், 9வது நிமிடத்தில் மன்தீப் சிங் ஆகியோர் அடுத்தடுத்து கோலடித்தனர். முதல் குவார்ட்டர் முடிவில்  இந்தியா 2-1 என முன்னிலை வகித்தது.19வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அலெக்சாண்டர் ராபி கோலடிக்க, 2வது கால் பகுதி முடிவில் இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தன. 3வது குவார்ட்டரில் கோல் ஏதும் விழவில்லை. அதனால் கடைசி கட்ட ஆட்டத்தில் அனல் பறந்தது. 48வது நிமிடம் வரை 2-2 என இருந்த சமநிலை அதன் பிறகு பெல்ஜியத்துக்கு சாதகமாக மாறியது. அந்த அணியின் அலெக்சாண்டர் ராபி 49வது மற்றும் 53வது நிமிடத்தில்  கோலடித்து அசத்த, பெல்ஜியம் 4-2 என வலுவான நிலையை எட்டியது. அதன்பிறகு எஞ்சிய 7 நிமிடத்தில் இந்தியாவால் எந்த அதிசயமும் நிகழ்த்த முடியவில்லை. 60வது நிமிடத்தில் ஜான் டொமினிக் ஒரு கோல் போட, பெல்ஜியம் 5-2 என்ற கோல் கணக்கில் வென்று  தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தங்கம் அல்லது வெள்ளி பெறும் வாய்ப்பை இழந்த இந்தியா - ஜெர்மனி அணிகள், வெண்கலப் பதக்கத்துக்காக நாளை  காலை 7.00 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. அதைத் தொடர்ந்து பிற்பகல் 3.30க்கு சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் ஆஸ்திரேலியா - பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

மூலக்கதை