‘நாசா’ அனுப்ப

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘நாசா’ அனுப்ப

வாஷிங்டன்: நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, முதல் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. கடந்தாண்டு ஜூலை 30ம் தேதி அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர்.

இந்த விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது.

இந்த விண்கலம் 7 மாத பயணங்களுக்கு பின்னர் வெற்றிகரமாக தற்போது செவ்வாய்கிரகத்தை அடைந்த நிலையில், அதன் சுற்றுவட்டபாதையில் சுற்றி வந்தது. பின்னர் விண்கலத்தில் இருந்து ரோபோட்டிக் ரோவர், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் ஜெசிரோ பள்ளத்தில் தரையிறங்கியது.

சாஃப்ட் லேண்டிங் முறையில் பாராசூட்டை பயன்படுத்தி ரோவரை விஞ்ஞானிகள் தரையிறக்கினர். இதன் பின்னர் முதல் புகைப்படத்தை எடுத்து நாசாவுக்கு அனுப்பியது.

நாசாவின் விடாமுயற்சியாக அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்கி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாக நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

செவ்வாயில் ரோபோட்டிக் ரோவர் தரையிறங்கியதை கண்காணித்த நாசா விஞ்ஞானிகள் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

‘நான் செவ்வாய் கிரகத்தில் பாதுகாப்பாக இருக்கிறேன். உங்களின் விடாமுயற்சிக்கு வாழ்த்துகள்’ என்று நாசாவின் மார்ஸ் ரோவரின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

நாசாவின் முயற்சியை பல்வேறு நாடுகளின் தலைவர்களும், விஞ்ஞானிகளும் பாராட்டி உள்ளனர்.

 இந்தியாவை சேர்ந்த சுவேதா மோகன்

இந்தியாவில் பிறந்த ‘நாசா’ விஞ்ஞானி டாக்டர் சுவேதா மோகனுக்கு, பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய திட்டத்தில் மிகப் பெரிய பங்குள்ளது. கடந்த 2013ல் இத்திட்டம் தொடங்கிய போது, ஜி. என். அண்ட் சி எனப்படும் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்தார்.

ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்த சுவேதா, ஒன்றாவது வயதில் அமெரிக்கா சென்றார்.

விண்வெளி ஆய்வில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து, டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

மேலும், நாசாவின் சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயண திட்டங்களிலும் சுவேதா ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை