இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்: உ

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாநியூசிலாந்து இன்று மோதல்: உ

உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உச்சத் தில் இருக்கும் இரு அணிகளான இந்தியா- நியூசிலாந்து ஐசிசி முதல் முறையாக நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின், சவுத்தாம்டன் நகரில் இருக்கும் மைதானத்தில் இன்று பிற்பகல் களம் காண்கிறது. ஆஸ்திரேலிய அணி யை அதன் சொந்த மண்ணிலும், இங்கிலாந்து அணியை உள்ளூரிலும் வீழ்த்திய உற்சாகத்துடன் களமிறங்குகிறது விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி.

அதேவேளையில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய கெத்துடன் டெஸ்ட் இறுதிப் போட்டியை எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி. இந்திய கிரிக்கெட் அணி சொந்த நாட்டில் புலி, வெளிநாடுகளில் எலி என்ற விமர்சனத்தை கடந்த சில ஆண்டுகளாகவே பொய்யாக்கி வருகிறது.

அதனால் சவுத்தாம்டனில் நடைபெறும் இறுதிப் போட்டி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று 11 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில், எதிர்பார்த்தப்படியே முகமது சிராஜ் நீக்கப்பட்டு, அனுபவம் வாய்ந்த ஸ்பின் பவுலர்களான அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி அறிவித்த 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் ஓபனர்களுக்கான இடத்தில் ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே இருந்தது. இதனால், இறுதிப் போட்டியில் ஓபனர்களாக ரோஹித்-கில் ஜோடி களமிறங்குவது உறுதியாகிவிட்டது.

ஷுப்மன் கில் இதற்கு முன் இங்கிலாந்தில் விளையாடியது கிடையாது. ரோஹித் ஷர்மா இதற்கு முன் இங்கிலாந்தில் விளையாடியிருந்தாலும் ஓபனராக களமிறங்கியது இல்லை.

மிடில் வரிசையில்தான் களமிறங்கினார். இதனால், இங்கிலாந்து மைதானத்தில் இருவரும் அறிமுக ஓபனர்கள் என்று கூட கூறலாம்.

இறுதிப் போட்டிக்கு டியூக் பந்து பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த வகை பந்துகள் துவக்கத்தில் சிறப்பாக ஸ்விங் ஆகும். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிம் சவுத்தி, டிரன்ட் போல்ட் இருவரும் பந்தை அற்புதமாக ஸ்விங் செய்யக் கூடியவர்கள்.

இதனால், இவர்களுக்கு எதிராக ரோஹித்-கில் ஜோடி திணற வாய்ப்புள்ளது. இங்கிலாந்து மண்ணில் சமீப காலமாகவே துவக்க ஜோடி சிறப்பாக சோபித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புஜாரா, கோஹ்லி, ரஹானே ஆகியோர் வழக்கம்போல் 3, 4, 5 ஆம் இடங்களில் களமிறங்கக் கூடியவர்கள். இந்த 3 பேரும் இதற்குமுன் இரண்டுமுறை இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.

புஜாரா சிறந்த முறையில் தடுப்பாட்டத்தில் ஈடுபடக் கூடியவர். எனவே இவர் அதிக பந்துகளை எதிர்கொள்ளும் பட்சத்தில் கோஹ்லி, ரஹானே ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது.ஏனென்றால், டியூக் பந்துகள் 30 ஓவர்களுக்குப் பிறகு சிறப்பாக ஸ்விங் ஆகாது, பவுன்சரும் ஆகாது. இதனால், புஜாரா அதிக பந்துகளை எதிர்கொண்டால் கோஹ்லி, ரஹானே ஆகியோர் சிறப்பாக ஸ்கோர் செய்யலாம் என கருதப்படுகிறது.
அடுத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட்.

இவர் சமீப காலமாகவே பவுலர்களை அச்சுறுத்தி சிறப்பான ஆட்டத்தை ஆடி வருகிறார். குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக பட்டையக் கிளப்ப கூடியவர்.

கோஹ்லி, ரஹானே இருவரும் சிறப்பாக விளையாடி பந்துவீச்சாளர்களை சோர்வடைய வைத்தால், ரிஷப் பன்ட் அணியின் ஸ்கோரை கிடுகிடுவென உயர வைக்க முடியும். ஹனுமா விஹாரி சமீபத்தில் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடியிருந்தார்.

அதில் சிறப்பாக சோபிக்கவில்லை. இதன் காரணமாக இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.இதனால், கடந்த சில போட்டிகளில் ஆல்-ரவுண்டர்களாக ஜொலித்த ஜடேஜா, அஸ்வின் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு, ஜடேஜா தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் இதில் எந்த குறையும் இல்லை. கடினமான கேட்சை சுலபமாகப் பிடித்து ஆட்டத்தின் போக்கை அசால்ட்டாக மாற்றக் கூடியவர்.

அஸ்வின், கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெஸ்ட் ஆல்-ரவுண்டராக திகழ்ந்தார். நல்ல பார்மில் இருப்பதால் நியூசிலாந்துக்கு எதிராக அதிரடி காட்ட வாய்ப்புள்ளது.

இவர் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நல்ல ரெக்காட்ஸ் வைத்துள்ளார். நியூசிலாந்து அணி ஓபனர்கள் லதாம், கான்வே இருவரும் இடது கை பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி அறிவித்த 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

உமேஷ் யாதவ் கடந்த சில போட்டிகளில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முகமது ஷமி, ஜஸ்பரீத் பும்ரா இருவரும் அணியின் மெய்ன் பந்துவீச்சாளராக இருக்கிறார்கள்.

கடைசி ஒரு இடத்திற்கு இஷாந்த், சிராஜ் இடையில் பலத்த போட்டி இருந்து வந்தது. இருவரும் கடந்த சில போட்டிகளில் அபாரமாகச் செயல்பட்டிருக்கிறார்கள்.

இருப்பினும், அனுபவம் அடிப்படையில் இஷாந்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அணி: ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், சேத்தேஸ்வர் புஜாரா, விராட் கோஹ்லி (கேப்டன்), அஜிங்கிய ரஹானே (துணை கேப்டன்), ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ஜஸ்பரீத் பும்ரா, இஷாந்த் ஷர்மா.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால் அதன் சீதோஷ்ண நிலை நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என பலரும் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாகவே கோப்பையை வெல்வதற்கான சாத்தியக் கூறுகள் நியூசிலாந்துக்கு அதிகம் இருப்பதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி சாதகங்கள் பல நியூசிலாந்துக்கு இருக்க, சில பாதகங்கள் இந்தியாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் எப்போதும் இதுபோன்ற யூகங்களை உடைப்பதுதான் இந்தியாவின் சாதனையாக சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.

அதனால் இதுபோன்ற கருத்துகளை உடைத்து கோஹ்லியின் படை உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என நம்பலாம்.

.

மூலக்கதை