அர்ஜென்டினாவை வீழ்த்தியது ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்தியா: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
அர்ஜென்டினாவை வீழ்த்தியது ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்தியா: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

டோக்கியோ: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் இன்று நடந்த ‘ஏ’ பிரிவு போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய ஹாக்கி அணி, ஒலிம்பிக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் ஹாக்கியில் ‘ஏ‘ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 1-7 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

நேற்று முன்தினம் ஸ்பெயின் அணியுடன் நடந்த போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினாவுடன் மோதியது.

இப்போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளின் வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக இந்திய அணியின் பின்கள வீரர்கள், அர்ஜென்டினாவின் தாக்குதல்களையும், கோல் முயற்சிகளையும் பதறாமல் எதிர்கொண்டு, முறியடித்தனர்.

அர்ஜென்டினாவின் தடுப்பாட்டமும் முதல் பாதியில் அருமையாக இருந்தது.

பந்துடன் தங்களது பெனால்டி ஏரியாவுக்குள் பாய்ந்து பாய்ந்து முன்னேறிய இந்திய வீரர்களின் முயற்சிகளையும் அவர்கள் வெற்றிகரமாக முறியடித்து விட்டனர். இதையடுத்து முதல் பாதி ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை.
2வது பாதி ஆட்டம் துவங்கியதுமே இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர்.

வேகமான மற்றும் துல்லியமான பாஸ்கள் மூலம் அர்ஜென்டினாவுக்கு போக்கு காட்டினர். அர்ஜென்டினா வீரர்கள், இந்திய வீரர்களின் தாக்குதல்களை தடுப்பதிலேயே கவனம் செலுத்தினர்.

ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி, மின்னல் வேகத்தில் வருண் குமார் ஒரு கோல் அடித்தார்.

அந்த முதலாவது கோல் விழுந்ததுமே ஆட்டத்தின் விறுவிறுப்பு எகிறியது. அர்ஜென்டினாவின் முன்கள வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்தனர்.அடுத்த 5வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை தவற விடாமல் அர்ஜென்டினாவின் மெய்கோ காசெல்லா ஸ்கட்ச், ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையை அடைந்தன. இருப்பினும் இந்திய வீரர்கள் மனம் தளரவில்லை.

தொடர்ந்து தாக்குதல் பாணியையே கடைபிடித்தனர். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

58வது நிமிடத்தில் இந்திய வீரர் விவேக் சாகர் பிரசாத், அற்புதமாக பந்தை கடத்தி சென்று, ஒரு ஃபீல்டு கோல் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே இந்திய அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

ஹர்மன்ப்ரீத் சிங், அதையும் கோலாக மாற்றினார். இறுதியில் இப்போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. நாளை நடைபெற உள்ள ‘ஏ’ பிரிவின் கடைசி ஆட்டத்தில் ஜப்பானை எதிர்த்து இந்தியா மோதவுள்ளது.

ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி. வி. சிந்து, இன்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில், டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்பெல்ட்டை நேர் செட்களில் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் பி. வி. சிந்து, ஒலிம்பிக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் குரூப் ‘ஜே’யில் இடம் பெற்றுள்ள இந்திய வீராங்கனை பி. வி. சிந்து, தனது முதல் போட்டியில் இஸ்ரேல் வீராங்கனையை 21-7, 21-10 என நேர் செட்களில் வீழ்த்தினார்.

நேற்று நடந்த போட்டியில் ஹாங்காங் வீராங்கனை செங் யீயை 21-9, 21-16 என வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் உலக தரவரிசையில் தற்போது 7ம் இடத்தில் உள்ள பி. வி. சிந்து, தரவரிசையில் 18ம் இடத்தில் உள்ள டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்பெல்ட்டுடன் இன்று காலை நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மோதினார்.

முதல் செட்டில் மியா சற்று நிதானமாக ஆடினார். இருப்பினும் சிந்துவின் அதிரடி தாக்குதல்களை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை.

மேலும் சரியான இடங்களில் அவரது ஷாட்கள் விழவில்லை. அந்த செட்டை 21-15 என சிந்து கைப்பற்றினார்.

2வது செட்டிலும் மியாவால் ஓரளவே தாக்குப்பிடிக்க முடிந்தது.

சிந்து தொடர்ந்து புள்ளிகளை அதிகரித்துக் கொண்டே முன்னேறி, அந்த செட்டை 21-13 என கைப்பற்றி, இப்போட்டியில் 21-15, 21-13 என நேர் செட்களில் வென்றார். இந்த வெற்றியின் மூலம் பி. வி. சிந்து ஒலிம்பிக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மொத்தம் இந்த போட்டி 41 நிமிடங்களில் முடிந்தது. ஜப்பானின் 4ம் நிலை வீராங்கனை அகானே யமகுச்சி மற்றும் 12ம் நிலை வீராங்கனையான தென்கொரியாவின் கிம் கா-யூன் இன்று மோதுகின்றனர்.

அதில் வெற்றி பெறும் வீராங்கனையுடன் நாளை கால்இறுதியில் சிந்து பலப்பரீட்சை நடத்துவார்.

.

மூலக்கதை