உலக பட்டியலில் குஜராத்தின் தோலாவீரா
புதுடில்லி : உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலாவீரா நகரை யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் கலாசார அமைப்பு சேர்த்துள்ளது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களை தேர்வு செய்யும் கமிட்டியின் கூட்டம் சீனாவின் பூஜோவ் நகரில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பட்டியலில் புதிதாக சேர்க்கப்படும் இடங்கள் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் உள்ள ராமப்பா கோயில் உலக பாரம்பரிய பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின் அடையாளமாக விளங்கும் தோலாவீரா நகரை உலக பாரம்பரிய பட்டியலில் யுனெஸ்கோ நேற்று சேர்த்துள்ளது. இத்துடன் சேர்த்து உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் நம் நாட்டின் 40 இடங்கள் இடம் பெற்றுள்ளன.