யாரும் விரும்பி செய்வது இல்லை பிச்சை எடுக்க தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து

தினகரன்  தினகரன்
யாரும் விரும்பி செய்வது இல்லை பிச்சை எடுக்க தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி:கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தெருக்கள், போக்குவரத்து சந்திப்புகள், பொது இடங்களில் பிச்சை எடுப்பதற்கும், பிச்சைக்காரர்களுக்கும், வீடற்றவர்களுக்கும் தடை விதிக்கக் கோரியும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சந்திராசூட், எம்.ஆர்.ஷா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:  மக்கள் தெருவில் பிச்சை எடுப்பதற்கு வறுமையே காரணம். இது சமூக பொருளாதார பிரச்னை. யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல்தான் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் ஒரேடியாக நம் கண்களில் இருந்து மறைந்து விட வேண்டும் என உத்தரவிட முடியாது. பிச்சைக்காரர்களுக்கும், வீடற்றவர்களுக்கும் மற்றவர்களைப் போலவே மருத்துவ வசதி பெற உரிமை இருக்கிறது. தொற்று நோய் காலத்தில் அவர்களுக்கு உணவு, உறைவிடம், தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய அரசும், டெல்லி மாநில அரசும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புகிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மூலக்கதை