ஏழு மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
ஏழு மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு

புதுடில்லி : நாட்டின் ஏழு மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா புதிய பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தினசரி பதிவான புதிய பாதிப்புகளின் சராசரி எண்ணிக்கை, மே 5 - 11 தேதிகளில் 3.87 லட்ச மாக இருந்தது. ஜூலை 21 - 27 காலத்தில் அது 38 ஆயிரத்து 90 ஆக குறைந்துள்ளது.கடந்த சில வாரங்களில் புதிய பாதிப்புகள் குறையும் விகிதம் பின்தங்கி உள்ளது.அதேபோல் ஏழு மாநிலங்களின் 22 மாவட்டங்களில் கடந்த நான்கு வாரங்களாக புதிய பாதிப்புகள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.இவற்றில் எட்டு மாவட்டங்களில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், புதிய பாதிப்புகள் அதிகரிக்கின்றன. ஆயுதப்படை மருத்துவக் கல்லுாரி தரப்பில் நடத்திய ஆய்வில் 'கோவிஷீல்டு' தடுப்பூசி 93 சதவீதம் பாதுகாப்பு அளிப்பது உறுதி யாகி உள்ளது. இறப்பையும் 98 சதவீதம் தடுக்கிறது.
நான்கு மாதங்களுக்கு பின், நேற்று முன்தினம், நாட்டின் ஒரு நாள் புதிய தொற்று 30 ஆயிரத்திற்கு குறைவாகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நான்கு லட்சத்திற்கு குறைவாகவும் பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆக்சிஜன் பலி எண்ணிக்கை



கொரோனா இரண்டாம் அலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியானோர் எண்ணிக்கை குறித்த தகவல்களை தரும்படி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று கடிதம் எழுதி உள்ளது.இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, 'ஆக., 13ல் பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் முடிவதற்குள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தோர் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என, மாநிலங்களிடம் கேட்டுள்ளோம்' என்றார்.

மூலக்கதை