உத்தரவு! பெருங்காமநல்லூரில் தியாகிகள் மணிமண்டபம் .......அமைக்க கோரி வழக்கில் உயர்நீதிமன்றம்

தினமலர்  தினமலர்
உத்தரவு! பெருங்காமநல்லூரில் தியாகிகள் மணிமண்டபம் .......அமைக்க கோரி வழக்கில் உயர்நீதிமன்றம்

மதுரை : மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பெருங்காமநல்லுாரில் மாற்று இடத்தை தேர்வு செய்து தியாகிகள் மணிமண்டபம் அமைக்க கோரிய வழக்கில்,'சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து நிவாரணம் தேடலாம்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பெருங்காமநல்லுார் வீரமங்கை மாயக்காள் மகளிர் நலச் சங்கம் தலைவர் செல்வபிரீத்தா தாக்கல் செய்த பொதுநல மனு: ஆங்கிலேயர் ஆட்சியில் 1920 ஏப்.,3 ல் குற்றப்பழங்குடிச் சட்டம், கைரேகைச் சட்டத்தை எதிர்த்து பெருங்காமநல்லுாரில் மக்கள் போராடினர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்த தியாகிகள் நினைவாக அங்கு நினைவுத் துாண் அமைக்கப்பட்டு உள்ளது. தியாகிகள் நினைவு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மண்டபத்தில் அலுவலகம், நுாலகம், சிறுவர் பூங்கா, போர் சம்பந்தமான ஆவணம், போட்டோக்கள் இடம் பெற வேண்டும்.

மயானம் என வகைப்படுத்தப்பட்ட இடத்தில் மண்டபம் அமைக்க உள்ளனர். மண்டபத்திற்கு கிராமத்தினர் இலவசமாக மாற்று இடம் வழங்கத் தயார். அங்கு மண்டபம் அமைக்க வேண்டும். கட்டுமானப் பணிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு செல்வபிரீத்தா மனு செய்தார். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு: இதில் நீதிமன்றம் தலையிட்டு எவ்வித உத்தரவும் பிறப்பிக்க இயலாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து நிவாரணம் தேடலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது, என்றனர்.

மூலக்கதை