வன்னியர் தனி இட ஒதுக்கீடு எதிர்த்து தொடர் போராட்டம் :252 சமுதாயங்களின் கூட்டமைப்பு முடிவு

தினமலர்  தினமலர்
வன்னியர் தனி இட ஒதுக்கீடு எதிர்த்து தொடர் போராட்டம் :252 சமுதாயங்களின் கூட்டமைப்பு முடிவு

கோவை : 'வன்னியர் சமூகத்தினருக்கு தனி இட ஒதுக்கீட்டை அமல் செய்யும், தமிழக அரசின் முடிவை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என, பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் சமுதாய கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

அறிவிப்புமுந்தைய அ.தி.மு.க., அரசு, சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு சற்று முன், வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீட்டை அறிவித்தது.அதே நாளில் கவர்னர் ஒப்புதலும் பெற்று, அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் வரும் மற்ற சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், 'அ.தி.மு.க., ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட வன்னியர் தனி இட ஒதுக்கீடு உத்தரவு அமல் செய்யப்படும்' என, நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
'இந்நிலையில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு தலைவர் ரத்தினசபாபதி, கூட்டமைப்பு செயலர் திருஞானசம்பந்தம், ஒக்கலிக கவுடர் சங்க மாநில தலைவர் வெள்ளிங்கிரி, தமிழ்நாடு யாதவர் பேரவை உயர்மட்டக்குழு தலைவர்

வேலுசாமி.தேவர் பேரவையின் கோவை மாவட்ட பொதுச் செயலர் மாரியப்பன், செங்குந்த முதலியார் சங்க மாவட்ட தலைவர் அசோக், தேவாங்க செட்டியார் சமூக கூட்டமைப்பு நிர்வாகி மனோகரன், தமிழ்நாடு ரெட்டி நலச்சங்க மாநில பொதுச் செயலர் ஜனகராஜன் உள்ளிட்ட பல்வேறு சமுதாய சங்கங்களின் நிர்வாகிகள், கோவையில் நேற்று கூட்டாக அளித்த பேட்டி:

உத்தரவுதமிழகத்தில் கொங்கு வேளாள கவுண்டர், வேளாளர், முதலியார், முக்குலத்தோர், நாடார், ஒக்கலிக கவுடர், யாதவர், செட்டியார், ரெட்டியார் உள்ளிட்ட சமூகங்களின் இட ஒதுக்கீட்டில், 1985முதல் அநீதி இழைக்கப்படுகிறது.இந்த சமூக இளைஞர்களின் உயர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது. 1989ம் ஆண்டு அரசாணை எண் 242 பிறப்பிக்கப்பட்டது முதல், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமை பாதிப்பு துவங்கியது. அம்பாசங்கர் ஆணைய அறிக்கையை அடிப்படையாக கொண்டு, 1989ல் மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு - எம்.பி.சி., என்ற தொகுப்பு உருவாக்கப்பட்டது.இந்திய அரசியலமைப்புக்கு முரண்பாடான இந்த தொகுப்பை அமல் செய்ததால், வன்னியர் சமூகத்தினர் வலிமை பெற்றுள்ளனர். தமிழக அரசு பணியில் 1 லட்சம் பேர் இருப்பதாக, அந்த சமூகத்தினரே கூறுகின்றனர்.
இத்தகைய சூழலில், ஒரு பலவீனமான அரசு இருந்ததை சாதகமாக்கி, தேர்தல் நேரத்தில், 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு உத்தரவும் பெற்று விட்டனர்.

முடிவுஒரு சமூகத்தினருக்கு மட்டும் தனி ஒதுக்கீடு தருவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள, 252 சமூகங்களைச் சேர்ந்த 5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு, குலசேகரன் கமிஷன் அமைக்கப்பட்ட நிலையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், இப்படி ஒதுக்கீடு கொடுத்தது தவறு. வன்னியர் தனி ஒதுக்கீடு சட்டத்தை அமல் செய்யக்கூடாது. அதை 'வாபஸ்' பெற வேண்டும். குலசேகரன் கமிஷனை மாற்றி அமைக்க வேண்டும்.இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், 10.5 சதவீதம் தனி ஒதுக்கீட்டை அமல் செய்வதை கண்டித்தும், 252 சமுதாயங்கள் அடங்கிய சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை