இனியும் ஏமாற்ற முடியாது! தெருவிளக்கு எரியலைன்னா அபராதம்:ஒப்பந்த நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
இனியும் ஏமாற்ற முடியாது! தெருவிளக்கு எரியலைன்னா அபராதம்:ஒப்பந்த நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

கோவை:''கோவை மாநகராட்சியுடன் பல்வேறு நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் செய்துள்ள ஒப்பந்தங்களை, மேலாண்மை செய்யும் பணியில், இனி தனி கவனம் செலுத்தப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் தெரிவித்தார்.

கோவையில் குப்பை அள்ளுதல், குடிநீர் வழங்குதல், தெருவிளக்கு பராமரித்தல், ரோடு போடுதல், மழை நீர் வடிகால் கட்டுதல் உள்ளிட்ட, அத்தியாவசிய பணிகளை மாநகராட்சி மேற்கொள்கிறது.இதுதவிர, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள், பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டம், குறிச்சி - குனியமுத்துார் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டங்கள், வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், நஞ்சுண்டாபுரத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுதல், பூங்கா அமைத்தல், சமுதாய கூடம் கட்டுதல், மருத்துவமனைகள், பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள், செய்யப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு பணிக்கும், மாநகராட்சி நிர்வாகத்துடன், ஒப்பந்த நிறுவனத்தினர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிபந்தனைகளுடன், ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர்.பணிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை மட்டும் அதிகாரிகள் கவனித்து, பில் தொகையை கொடுத்து விடுகின்றனர். ஒப்பந்தப்படி, தரமாக பணிகள் செய்யப்பட்டு இருக்கின்றனவா, குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு செய்யப்படுகிறதா என, யாரும் ஆய்வு செய்வதில்லை.

இது தொடர்பாக, கமிஷனர் ராஜகோபால் கூறியதாவது:ஒப்பந்த நிறுவனங்களுக்கு நிபந்தனைகளுடன், உத்தரவு வழங்கப்படுகிறது. அந்த ஒப்பந்தங்களை சரியாக மேலாண்மை செய்யாமல் இருக்கின்றனர். சரியாக பணிகள் செய்யாவிட்டால், அபராதம் விதித்து, மக்களுக்கான சேவை தடையின்றி, கிடைக்கச் செய்ய வேண்டும்.ஒரு விளக்கு எரியாமல் இருந்து, 48 மணி நேரத்துக்குள் சரி செய்யாவிட்டால், ஒப்பந்ததாரருக்கு, 25 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். ஆனால், மாநகராட்சி தரப்பில் ஒரு முறை கூட, அபராதம் விதிக்காமல் இருக்கின்றனர்.

ஒரு நாள் விளக்கு எரியாவிட்டால், மாநகராட்சியை பொதுமக்கள் நாடப்போவதில்லை. தொடர்ச்சியாக பல நாட்கள் எரியாமல் இருள் சூழ்ந்திருந்தால் மட்டுமே, கமிஷனருக்கு புகார் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மக்களிடம் வரும். எனவே, தெருவிளக்கு பராமரிப்பு மோசமாக இருந்தால், இனி அபராதம் விதிக்கப்படும்.இதேபோல், போர்வெல் பராமரிப்பு பணியும், ஒப்பந்த முறையில் வழங்கப்படுகிறது. நீர் கசியும் இடங்களை கண்டறிந்து, சீரமைக்க வேண்டியது ஒப்பந்ததாரரின் பணி.இதுபோல், ஒப்பந்தம் கொடுத்துள்ள பணிகள், நிபந்தனைகளின்படி செய்யப்படுகிறதா என, தனி கவனம் செலுத்தி, கண்காணிக்கப்படும்.இவ்வாறு, கமிஷனர் கூறினார்.

மூலக்கதை