சாலைகள் பராமரிப்புக்கு ரூ.4,216 கோடி 3 நிறுவனங்களுக்காக அரசு பணம் வீணடிப்பு

தினமலர்  தினமலர்
சாலைகள் பராமரிப்புக்கு ரூ.4,216 கோடி 3 நிறுவனங்களுக்காக அரசு பணம் வீணடிப்பு

சென்னை :எட்டு மாவட்டங்களில் சாலை புதுப்பிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் மூன்று நிறுவனங்களுக்கு 4,216 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, அரசு நிதி வீணடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள்மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் முறையாக பராமரிக்கப்படாததால், விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்படுகின்றன.இச்சாலைகளை பல்வேறு நாடுகளில் உள்ளது போன்று, செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் வாயிலாக மேம்படுத்த, 2014ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்தார்.



5 ஆண்டுகள்



இத்திட்டத்தின்படி, சாலையை சீரமைத்து, ஐந்து ஆண்டுகளுக்கு முறையாக பராமரிக்க வேண்டும். அவ்வப்போது தேவைப்படும் மேம்பாட்டு பணிகளையும் சாலைகளில் மேற்கொள்ள வேண்டும்.இந்த திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள 377 கி.மீ., சாலைகளை சீரமைத்து, ஐந்து ஆண்டுகள் பராமரிப்பதற்கான ஒப்பந்த பணிகள், 2014ல் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டன. இதில், 191 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகள்,186 கி.மீ., மாவட்ட முக்கிய சாலைகள். ஜெயலலிதா மறையும்வரை, பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் முறையாக பராமரிக்கப்பட்டன.

ஒப்பந்தம்



அவரது மறைவிற்கு பின், ஒப்பந்த நிறுவனத்துடன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கைகோர்த்தனர். இதனால், ஒப்புக்கு சாலைகள் பராமரிக்கப்பட்ட நிலையில், நிறுவனத்தின் ஒப்பந்தம் 2019ல் முடிந்தது. இதற்காக, அந்நிறுவனத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு 234 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின், கிருஷ்ணகிரி கோட்டத்திற்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இங்கு 307 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகள், 274 கி.மீ., மாவட்ட முக்கிய சாலைகள் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு பணிக்கு, 450 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதேபோல ராமநாதபுரம் கோட்டத்தில் 229 கி.மீ., மாநில நெடுஞ்சாலை, 340 கி.மீ., மாவட்ட முக்கிய சாலை பராமரிப்பதற்கு 460 கோடி ரூபாய்; திருவள்ளூர் கோட்டத்தில் 498 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகள், 278 கி.மீ., மாவட்ட முக்கிய சாலைகள் பராமரிப்புக்கு அதிகபட்சமாக 630 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஒதுக்கீடு



விருதுநகர் கோட்டத்தில் 641 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் பராமரிப்புக்கு 611 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, பழநி மற்றும் சிவகங்கை கோட்டங்களில் 1,065 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் பராமரிப்பு பணிக்கு 1,403 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம்
செய்யப்பட்டு உள்ளது.இறுதியாக, கோபிசெட்டிபாளையம் கோட்டத்தில் 200 கி.மீ., சாலை பணிகளுக்கு 428 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, ஐந்து ஆண்டு களில் பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருவள்ளூர், விருது நகர், பழநி, சிவகங்கை, கோபி கோட்டங்களில் மட்டும், சாலை புதுப்பிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு 4,216 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன் வாயிலாக, மொத்தமாக 4,208 கி.மீ., சாலைகள் சீரமைக்கப்பட்டு பராமரிக்கப்படுவ தாக கணக்கு காட்டப்பட்டு வருகிறது.

கணக்கு



நெடுஞ்சாலை துறையால், ஒரு கி.மீ., மாநில நெடுஞ்சாலை அமைப்பதற்கு ௧ கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இவ்வாறு சாலை அமைத்தால், அதை மூன்று ஆண்டுகளுக்கு பின்னரே மீண்டும் புதுப்பிக்க வேண்டும். முறையாக சாலை அமைத்து விட்டால் ஐந்து ஆண்டு
களுக்கு மேலும் தாங்கும். ஆனால் போக்குவரத்து அதிகளவில் இருப்பதால், சாலைகள் பாதித்ததாக கூறி, அடிக்கடி பராமரிப்பு செலவு அதிகரித்து, கணக்கு காட்டப்பட்டு உள்ளது.எந்த சாலையும் முறையாக பராமரிக்கப்படவில்லை. எனவே, ஒதுக்கிய நிதியில் 50 சதவீதம் கூட செலவாக வாய்ப்பில்லை.

நுாதன முறை



பொள்ளாச்சி, திருவள்ளூர், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய கோட்டங்களில், அருப்புகோட்டையை சேர்ந்த தனியார் நிறுவனமும், பழநி, கிருஷ்ணகிரி கோட்டங்களில், மதுரை தனியார் நிறுவனமும், கோபி செட்டிப்பாளையம் கோட்டத்திற்கு, கோவையை சேர்ந்த தனியார் நிறுவனமும் இப்பணிகளை எடுத்துள்ளன.
இந்த மூன்று நிறுவனங்கள் ஆதாயம் பெறுவதற்காகவே, முழுக்க முழுக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு, அரசு நிதி பல கோடி ரூபாய் நுாதன முறையில் வீணடிக்கப்பட்டுஉள்ளது.இந்த முறைகேட்டில் கிடைத்த நிதியை, துறையின் முக்கியப்புள்ளி, ஒப்பந்த நிறுவனங்கள், மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட ஆளும் கட்சியினர் பகிர்ந்து கொண்டுஉள்ளனர்.எதிர்க்கட்சி நிர்வாகிகளும், ஒப்பந்த நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ், ஒரு சில கோட்டங்களில், தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, வரும் காலங்களில் இப்பணிகளை முறையாக செய்ய வேண்டும்.
ஐந்து ஆண்டுகளில், என்னென்ன பணிகள் நடந்துள்ளன என்பது குறித்த விபரங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். முறையாக பணிகளை செய்யாத ஒப்பந்த நிறுவனங்கள் மீது, முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

எந்த வளர்ச்சியும் இல்லை!



தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பட்டய பொறியாளர் சங்க நிர்வாகி கூறியதாவது:வெளிநாடுகளை போல நம் மாநிலத்தின் சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வந்த திட்டத்தை, தங்கள் ஆதாயத்திற்காக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பயன்படுத்தி உள்ளனர்.
திட்டங்களுக்கு கவர்ச்சிகரமான பெயரை வைத்து பணத்தை சுருட்டுவது ஒரு வகை தந்திரம். அதேபோன்று, இந்த திட்டமும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், எட்டு மாவட்டங்களின் சாலைகளில் எந்த வளர்ச்சியும் இல்லை. தஞ்சாவூரில் திட்டத்தின் பெயரை மாற்றி இரண்டு 'பேக்கேஜ்' அடிப்படையில், பணிகள் வழங்க ஏற்பாடு நடந்தது. கடும் எதிர்ப்பால் அந்த திட்டம் நீதிமன்றம் வரைக்கும் சென்றது. தற்போது, தி.மு.க., ஆட்சியில், துாத்துக்குடி கோட்டத்திற்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்த இருப்பதாக தகவல் வருகிறது.இதுபோன்று, ஒப்பந்ததாரருக்கு ஆதாயம் தரும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும். மக்கள் பணத்தை முறையாக செலவிட்டு, சாலைகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை