மகளிர் குத்துச்சண்டை: காலிறுதியில் லவ்லினா

தினகரன்  தினகரன்
மகளிர் குத்துச்சண்டை: காலிறுதியில் லவ்லினா

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியின் மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைபிரிவில், இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் காலிறுதிக்கு முன்னேறி பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். அசாம் மாநிலத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்ற முதல் வீராங்கனை என்ற பெருமைக்குரிய லவ்லினா (23 வயது), காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனியின் நடின் அபெட்ஸ் (35 வயது) உடன் நேற்று மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் லவ்லினா 3-2 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.நாளை மறுநாள் நடைபெற உள்ள காலிறுதியில் 4வது ரேங்க் வீராங்கனையும் முன்னாள் உலக சாம்பியனுமான நியன் சின் சென் சவாலை லவ்லினா எதிர்கொள்கிறார். 2018 உலக சாம்பியன்ஷிப் பைனலில் 1-4 என்ற புள்ளிக் கணக்கில் சின் சென்னிடம் அடைந்த தோல்விக்கு இம்முறை ஒலிம்பிக்கில் பழிதீர்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்த போட்டியில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினாலே பதக்கம் வெல்வது  உறுதியாகிவிடும் என்பதால், லவ்லினா மீதான எதிர்பார்ப்பு வெகுவாக  அதிகரித்துள்ளது.

மூலக்கதை