ஆண்கள் ஹாக்கியில் அசத்தல்: ஸ்பெயினை வீழ்த்தியது இந்தியா

தினகரன்  தினகரன்
ஆண்கள் ஹாக்கியில் அசத்தல்: ஸ்பெயினை வீழ்த்தியது இந்தியா

ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. அடுத்து பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 1-7 என்ற கோல் கணக்கில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், 3வது லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியுடன் நேற்று மோதியது. ஆஸி.க்கு எதிராக அடைந்த அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீள்வதுடன் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் களமிறங்கிய இந்திய வீரர்கள், ஒருங்கிணைந்து விளையாடி ஸ்பெயின் கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். இதன் பலனாக, 14வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் சிங் அபாரமாக கோல் அடித்து 1-0 என முன்னிலை ஏற்படுத்தினார். அடுத்த நிமிடத்திலேயே ரூபிந்தர் பால் சிங் கோல் அடிக்க 2-0 என முன்னிலை அதிகரித்தது. அதே உற்சாகத்துடன் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு 51வது நிமிடத்தில் ரூபிந்தர் பால் மேலும் ஒரு கோல் அடித்து அசத்தினார். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. அடுத்த லீக் ஆட்டத்தில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா அணியுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள 6 அணிகளும் தலா 3 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா ஹாட்ரிக் வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2வது இடம் வகிக்கிறது. நியூசிலாந்து (4), அர்ஜென்டினா (4), ஜப்பான் (1), ஸ்பெயின் (1) அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன.

மூலக்கதை