துப்பாக்கிசுடுதலில் தொடர்ந்து சொதப்பல்

தினகரன்  தினகரன்
துப்பாக்கிசுடுதலில் தொடர்ந்து சொதப்பல்

டோக்கியோ ஒலிம்பிக்சில் இந்தியாவுக்கு அதிக பதக்கங்களை அள்ளித் தரும் விளையாட்டாக துப்பாக்கிசுடுதல் இருக்கும் என்ற கணிப்பும் எதிர்பார்ப்பும் தவிடுபொடியாகி இருக்கிறது. ஏற்கனவே தனிநபர் போட்டிகளில் ஏமாற்றமளித்த இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று கலப்பு குழு பிரிவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே களமிறங்கினர். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு பிரிவில் இந்தியாவின் மானு பேக்கர் - சவுரவ் சவுத்ரி இணை முதலாவது தகுதி சுற்றில் 582 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது நம்பிக்கையை கொடுத்தது. மொத்தம் 20 பேர் பங்கேற்ற முதல் நிலை தகுதி சுற்றில் இந்தியாவின் யாஷஸ்வினி தேஸ்வால் - அபிஷேக் வர்மா இணை 564 புள்ளிகளுடன் 17வது இடம் பிடித்து வெளியேறியது. அடுத்து 2வது நிலை தகுதி சுற்றில் 8 அணிகள் களமிறங்கின. இதில் பதற்றத்துடன் செயல்பட்ட மானு - சவுரவ் இணை 380 புள்ளிகள் மட்டுமே பெற்று 7வது இடம் பிடித்தது. முதல் 2 இடங்களைப் பிடித்த சீனா (387), ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி (386) அணிகள் தங்கப் பதக்கத்துக்காக மோதின. 3வது, 4வது இடத்தை பிடித்த உக்ரைன் (386), செர்பியா (384) அணிகள் வெண்கலப் பதக்கத்துக்கு போட்டியிட்டன. இப்போட்டியில் சீனா தங்கப் பதக்கமும், ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வெள்ளிப் பதக்கமும் வென்றன. உக்ரைன் அணி வெண்கலம் வென்றது. அடுத்ததாக 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு குழு பிரிவு முதல் நிலை தகுதி சுற்றில் களமிறங்கிய இந்தியாவின் இளவேனில் வாளறிவன் - திவ்யான்ஷ் சிங் பன்வார் இணை 12வது இடம் பிடித்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. இதே சுற்றில் பங்கேற்ற அஞ்சும் மோத்கில் - தீபக் குமார் ஜோடியால் 18வது இடம் மட்டுமே பிடிக்க முடிந்தது. இப்படி துப்பாக்கிசுடுதலில் இந்திய வீரர், வீராங்கனைகள் அடுத்தடுத்து சொதப்பி பதக்க வாய்ப்பை வீணடித்தனர். இந்த எதிர்பாராத தோல்வி குறித்து இந்திய தேசிய ரைபிள் சங்க தலைவர் ரனிந்தர் சிங் கூறுகையில், ‘டோக்கியோ ஒலிம்பிக்சில் இந்திய துப்பாக்கிசுடுதல் அணியினர் செயல்பாடு எதிர்பார்த்த வகையில் அமையவில்லை. இதற்குக் காரணமான பயிற்சியாளர்கள், அணி உதவியாளர்கள் குழுவை அடியோடு மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம்’ என்றார்.

மூலக்கதை