பெகாசஸ், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு மக்களவை 10 முறை ஒத்திவைப்பு: நாடாளுமன்றம் 6வது நாளாக முடங்கியது

தினகரன்  தினகரன்
பெகாசஸ், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு மக்களவை 10 முறை ஒத்திவைப்பு: நாடாளுமன்றம் 6வது நாளாக முடங்கியது

புதுடெல்லி: பெகாசஸ் ஒட்டுகேட்பு, வேளாண் சட்டங்களை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளி செய்ததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் நேற்றும் 6வது நாளாக முடங்கின. மக்களவை 10 முறை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத் தொடரின் முதல்நாளில் இருந்தே, பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் செல்போன் ஒட்டு கேட்கப்பட்டது, வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இதுவரை கூட்டத்தொடரின் ஒருநாள் கூட முழுமையாக நடக்கவில்லை. இந்நிலையில் நேற்றும் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பமே நீடித்தது.மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் சமீபத்தில் இறந்த உலக தலைவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெகாசஸ், வேளாண் சட்டங்கள் விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், திரிணாமுல் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 11.45 மணிக்கு முதல் முறையாக ஒத்திவைக்கப்பட்ட அவை, பின்னர் அடுத்தடுத்து மாலை 4.30 மணி வரை 10 முறை ஒத்திவைக்கப்பட்டு பின் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  மாநிலங்களவையிலும் காலை 12 மணிக்கு தொடங்கியதில் இருந்தே அமளி நீடித்தது. இதனால், பலமுறை அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ‘கடல்சார் வழிகாட்டு மசோதா’ தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, அமளிக்கு இடையே மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. மாலை 4 மணிக்கு பிறகு கூச்சல், குழப்பம் நீடித்ததால் நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதன்மூலம், முதல் நாளில் இருந்து நேற்று வரையில் தொடர்ந்து 6வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இதற்கிடையே மக்களவை நேற்று மாலை 4.45 மணி அளவில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் ரன்வீத் சிங் பிட்டு, குர்ஜித் சிங் அஜாலா ஆகியோர் அவையில் தர்ணாவில் ஈடுபட்டனர். இரவு வரை அவர்களின் தர்ணா போராட்டம் தொடர்ந்தது. காங்கிரஸ் மீது மோடி காட்டம்பாஜ நாடாளுமன்ற எம்பி.க்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று காலை நடந்தது. அப்போது பேசிய மோடி, ‘‘காங்கிரசின் எதிர்மறையான அணுகுமுறை வருத்தமளிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அவையில் நடந்து கொள்ளும் விதம் துரதிருஷ்டவசமானது. பழமையான கட்சியே இன்று நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கிக் கொண்டிருக்கிறது. அவையில் விவாதிக்கவும், அவையை நடத்த விடவும் காங்கிரஸ் விரும்பவில்லை. கொரோனா தடுப்பூசி தொடர்பாக கடந்த வாரம் நடந்த அனைத்து கட்சி கூட்டத்திலும் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. மற்றவர்களையும் பங்கேற்க விடாமல் தடுத்தது,’’ என்றார்.ஜனாதிபதிக்கு கடிதம்தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சிரோன்மணி அகாலி தளம், இடதுசாரிகள் உள்ளிட்ட 7 கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு நடப்பு மழைக்கால கூட்டத்தொடரிலேயே விவாதம் நடத்த, தாங்கள் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை வேண்டும்’ என கூறியுள்ளனர்.ராகுல் காந்தி தலைமையிலும் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.விளம்பர செலவு 3 ஆண்டில் குறைப்பு* கடந்த 2019ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டம் (சிஏஏ) தொடர்பான விதிமுறைகள் வகுப்பதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி வரை நீட்டிக்க ஒன்றிய அரசு அவகாசம் கேட்டிருப்பதாக மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார். விதிமுறை வகுக்க, 5வது முறையாக அவகாசம் நீட்டிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.* கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய துணை ராணுவப் படையினர், அசாம் ரைபிள் படையினர் 355 பேர் பலியாகி இருப்பதாக மக்களவையில் அமைச்சர் நித்யானந்த் ராய் கூறி உள்ளார். அதிகபட்சமாக 209 பேர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்தவர்கள்.* பத்திரிகைகளில் ஒன்றிய அரசின் விளம்பர செலவு கடந்த 3 ஆண்டில் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். கடந்த 2018-19ம் ஆண்டில் ரூ.429.55 கோடியும், 2019-20ல் ரூ.295.05 கோடியும், 2020-21ல் ரூ.197.40 கோடியும் விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டிருப்பதாக  கூறி உள்ளார்.

மூலக்கதை