டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

டோக்கியோ; ஒலிம்பிக்கில் இன்று மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் முதல் சுற்று போட்டியில், இந்திய வீராங்கனை பி. வி. சிந்து, இஸ்ரேல் வீராங்கனை பெலிகார்போ செனியாவை நேர் செட்களில் எளிதாக வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பேட்மிண்டன் மகளிர் ஒற்றையரில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் பி. வி. சிந்து, டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் குரூப் ‘ஜே’யில் இடம் பெற்றுள்ளார்.

இன்று காலை டோக்கியோ முசாஷினோ ஃபாரஸ்ட் ஸ்போர்ட்ஸ் பிளாசாவில் நடந்த பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில், சிந்துவும், இஸ்ரேல் வீராங்கனை செனியா போலிகர்போவாவும் மோதினர்.

தற்போது தரவரிசையில் சிந்து, 7ம் இடத்திலும், செனியா பொலிகர்போவா 58ம் இடத்திலும் உள்ளனர்.

போட்டி துவங்கியது முதலே சிந்துவை எதிர்கொள்ள முடியாமல் பொலிகர்போவா திணறினார். முதல் செட்டில் தொடர்ச்சியாக 14 புள்ளிகளை வென்ற சிந்து, அந்த செட்டை எதிர்ப்பே இல்லாமல் 21-7 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

2வது செட்டிலும் சிந்துவின் ஆக்ரோஷமான சர்வீஸ் தொடர்ந்தது. முழுக்க முழுக்க தாக்குதல் பாணியில் ஆடிய சிந்துவிடம், பொலிகர்போவா சரணடைந்து விட்டார்.

அந்த செட்டையும் 21-10 என்ற கணக்கில் கைப்பற்றி, இப்போட்டியில் 21-7, 21-10 என எளிதாக நேர் செட்களில் பி. வி. சிந்து வெற்றி பெற்றார்.

இதே பிரிவில் (குரூப் ‘ஜே’)இடம் பெற்றுள்ள ஹாங்காங் வீராங்கனை செங் யான் யீயுடன் அடுத்த போட்டியில் சிந்து, மோதவுள்ளார்.

துடுப்பு படகு அரையிறுதியில் இந்திய ஜோடி டோக்கியோ ஒலிம்பிக்கில் துடுப்பு படகு ஆடவர் இரட்டையர் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய வீரர்கள் அரவிந்த் சிங்-அர்ஜுன் லால் ஜோடி தகுதி பெற்றுள்ளது. டோக்கியோவில் உள்ள சீ ஃபாரஸ்ட் வாட்டர்வேயில் இன்று நடந்த ஆடவர் இரட்டையர் துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர்கள் அரவிந்த் சிங்-அர்ஜுன் லால் ஜோடி, நிர்ணயிக்கப்பட்ட தொலைவை  6:51. 36 நிமிடங்களில் கடந்து 3வது இடத்தை பிடித்தது.

இதன் மூலம் ஒலிம்பிக்கில் அரையிறுதி போட்டிக்கு இந்த ஜோடி முன்னேறியுள்ளது.

இப்போட்டியில் போலந்தின் ஜெர்சி கோவால்ஸ்கி-ஆர்துர் மிகோலாஜ்செவ்ஸ்கி ஜோடி, 6:43. 44 நிமிடங்களில் இத்தொலைவை எட்டி, முதலிடத்தை பிடித்தது. ஸ்பெயினின் செர்ட்டானோ ஹோர்ட்டா-மானெல் பாலாஸ்டிக் ஜோடி, 6:45. 71 நிமிடங்களில் இத்தொலைவை கடந்து 2ம் இடத்தை பிடித்துள்ளது.

ஆடவர் துடுப்பு படகு இரட்டையர் அரையிறுதிப் போட்டிகள் வரும் 27ம் தேதி, இதே சீ ஃபாரஸ்ட் வாட்டர்வேயில் நடைபெற உள்ளது. அதில் இந்திய ஜோடி வெற்றி பெற்றால், வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்யலாம்.

இதனிடையே அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய ஜோடி அரவிந்த் சிங்-அர்ஜுன் லால் ஜோடிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சானியா-அங்கிதா ஜோடி தோல்வி
டென்னிஸ் மகளிர் இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா ஜோடி, உக்ரேனின் லியூட்மைலா-நாடியா ஜோடியிடம் போராடி தோல்வியடைந்தது. இன்று நடந்த முதல் சுற்றுப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் சானியாவும், அங்கிதாவும் முதல் செட்டில் ஆக்ரோஷமாக ஆடினர்.

அந்த செட்டை 6-0 என்ற கணக்கில் கைப்பற்றினர். ஆனால் 2வது செட்டில் லியூட்மைலா கெச்நோக் நாடியா கெச்நோக் ஜோடி திடீரென எழுச்சி பெற்றது.

2 ஜோடிகளும் விட்டுக் கொடுக்காமல் ஆடியதால் அந்த செட் 6-6 என சமநிலைக்கு வந்தது. இதையடுத்து டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.டைபிரேக்கரில் உக்ரேன் ஜோடியின் ஒரு கேமை கூட இந்திய வீராங்கனைகளால் கைப்பற்ற முடியவில்லை. இதனால் டைபிரேக்கரில் 7-6 (7-0) என உக்ரேன் ஜோடி, 2வது செட்டை கைப்பற்றி, பதிலடி கொடுத்தது.

3வது செட்டில் 2 ஜோடிகளும் கடுமையாக போராடினர். வெற்றியை தீர்மானிக்கும் செட் என்பதால், டைபிரேக்கர் இல்லாமல் தொடர்ந்து ஆட்டம் நடந்தது.

இறுதியில் அந்த செட்டை 10-8 என உக்ரேன் ஜோடி கைப்பற்றி, இப்போட்டியில் 6-0, 7-6, 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த தோல்வியினால், மகளிர் இரட்டையர் டென்னிசில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறி போனது.  

.

மூலக்கதை