எடப்பாடியுடன் மோதல் எதிரொலி; மோடியுடன் ஓபிஎஸ் நாளை சந்திப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
எடப்பாடியுடன் மோதல் எதிரொலி; மோடியுடன் ஓபிஎஸ் நாளை சந்திப்பு

* உட்கட்சி பிரச்னை குறித்து பேசுகிறார்
* அமித்ஷா, ஜே. பி. நட்டாவையும் சந்திக்க முடிவு

சென்னை: எடப்பாடியுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து ஓ. பி. எஸ். இன்று காலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.

நாளை அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது உட்கட்சி பிரச்னை தொடர்பாக  பேசுவார் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டாவையும் ஓ. பி. எஸ். சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

ஓபிஎஸ்ஸின் திடீர் டெல்லி பயணம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொது செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வம் முதல்வரானார்.

சசிகலா தன்னை முதல்வராக்க வேண்டும் என்று போர்க்கொடி எழுந்ததால் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். முதல்வராக சசிகலா பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.



இந்த நிலையில் சசிகலா மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறி அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் வெளியேறினார். தொடர்ந்து போட்டி அதிமுகவாக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கில் சசிகலா குற்றவாளி என்று தீர்ப்பு வந்தது. மேலும் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வமும் அதிமுகவில் இணைந்தார்.

அவருக்கு கட்சியை வழிநடத்தும் வகையில் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும் துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது.

அதே நேரத்தில் முதல்வர் இபிஎஸ்க்கு இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.

முதல்வராக இருந்ததால் கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் எடப்பாடி கொண்டு வந்தார். எடப்பாடியுடன் இருந்தால் தங்களுக்கு வேண்டிய காரியத்தை சாதித்து விடலாம் என்று கட்சியின் நிர்வாகிகள் அவருடனே இருந்து வந்தனர்.

ஓ. பி. எஸ். க்கு துணை முதல்வர் பதவியும் முக்கிய இலாகாக்களும் ஒதுக்கப்பட்டதால் இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் இருந்து வந்தார். முழுமையாக ஆட்சியையும், கட்சியையும் சுமார் 4 ஆண்டுகள் தனது கட்டுப்பாட்டில் எடப்பாடி வைத்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இதில் இபிஎஸ், ஓபிஎஸ்ஸில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் கடும் போட்டி நிலவியது.

இரண்டு பேரும் தனக்கு தான் முதல்வர் வேட்பாளர் பதவிக்கு கடுமையாக மோதினர். இரண்டு பேரும் முதல்வர் வேட்பாளர் பதவியை பிடிக்க காய் நகர்த்தி வந்தனர்.

இதனால், அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. கட்சி நிர்வாகிகள் சமாதானத்தை அடுத்து கடைசியில் ஓ. பன்னீர் செல்வம் முதல்வர் வேட்பாளர் பதவி வேண்டாம் என்று அறிவித்தார்.

எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து அதிமுக தேர்தலை சந்தித்தது. இதில் அதிமுக தோல்வியடைந்தது.

திமுக ஆட்சியை கைப்பற்றியது. அதிமுக எதிர்க்கட்சியானது.



இதனால், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு மீண்டும் எடப்பாடி, ஓபிஎஸ் இடையே பிரச்னை ஏற்பட்டது. கடைசியில் எடப்பாடி எதிர்க்கட்சி தலைவரானார்.

ஓபிஎஸ்க்கு எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது.   அதே நேரத்தில் கட்சியில் இருந்து ஓ. பி. எஸ். ஸை ஓரம் கட்டும் முயற்சியும் நடந்து வந்தது. இந்த நிலையில் அதிமுக உட்கட்சி தேர்தலை செப்டம்பர் மாதத்துக்குள் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதனால், தேர்தலை சந்திக்க ஓ. பி. எஸ், இபிஎஸ் இரண்டு பேரும் தயாராகி வருகின்றனர். கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்க எடப்பாடி முடிவு செய்துள்ளார்.

தான் பொது செயலாளராக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பணியாற்றி வருகிறாார்.

இதற்காக எடப்பாடி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இதனால், ஓபிஎஸ் கடும் கோபத்தில் இருந்து வருகிறார். அதே நேரத்தில் சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வந்தால் மீண்டும் அடிமை வாழ்க்கை வாழ வேண்டும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் நினைக்கின்றனர்.

இதனால், இரண்டு பேரும் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்று பொது செயலாளர் பதவியை பிடித்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்து வருகின்றனர். அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் சேருவதற்கும், சசிகலாவை கட்சியை விட்டு நீக்குவதற்கும் ஓபிஎஸ்க்கு பிரதமர் மோடி தான் ஆதரவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் ஓ. பிஎஸ்.

இன்று காலை 10. 50 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.

அவருடன் அவரது மருமகன் காசி விஸ்வநாதன் சென்றார். மேலும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் நேற்றே டெல்லிக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

டெல்லி சென்ற ஓபிஎஸ் தமிழ்நாடு இல்லத்தில் தங்காமல், தனது மகன் ரவீந்திரநாத்தின் எம்பி இல்லத்தில் தங்கினார். தொடர்ந்து நாளை காலை 10. 30 மணியளவில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

அப்போது அதிமுக உட்கட்சி பிரச்னை தொடர்பாக பேசுவார் என்று கூறப்படுகிறது. மேலும் எடப்பாடியின் நடவடிக்கை குறித்தும் பேச ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.



தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்து முதல் முறையாக ஓ. பி. எஸ். பிரதமரை சந்தித்து பேசுகிறார்.

தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே. பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இதனால் ஓபிஎஸ்-பிரதமர் மோடி சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதே நேரத்தில் ஓபிஎஸ் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை