பாஜ.வை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட மம்தா பானர்ஜி திட்டம்: சோனியாவுடன் விரைவில் சந்திப்பு

தினகரன்  தினகரன்
பாஜ.வை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட மம்தா பானர்ஜி திட்டம்: சோனியாவுடன் விரைவில் சந்திப்பு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி, அமித்ஷாவின் பிரமாண்ட பிரசாரத்தை முறியடித்து, மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, அடுத்ததாக தேசிய அரசியலை குறிவைத்துள்ளார். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவுக்கு எதிராக தேசிய அளவில் அரசியல் செய்ய மம்தா தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, ‘மக்களவை தேர்தல் வரும் வரை காத்திருக்கக் கூடாது. பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இப்போதே ஒன்றிணைய வேண்டும்,’ என அழைப்பு விடுத்தார்.இதைத் தொடர்ந்து, மம்தா வரும் 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் டெல்லியில் முகாமிட்டு எதிர்கால திட்டத்திற்கான காய் நகர்த்த உள்ளார். மம்தா தனது டெல்லி பயணத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியை சந்திக்கிறார். அதோடு, பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார். அதோடு, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவையும் மம்தா சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா கூறுகையில், ‘‘ டெல்லி வரும் மம்தா பானர்ஜி அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச ஆவலாக உள்ளார்,’’ என்றார். காங்கிரசுடன் இணைந்து எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்ட மம்தா முடிவு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை