இது உங்கள் இடம்: தேவையா இந்த வேண்டாத வேலை!

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம்: தேவையா இந்த வேண்டாத வேலை!

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



எஸ்.ஏ.தீக்கனல் சவரியார், திண்டுக்கலில்இருந்து அனுப்பிய 'இ- - மெயில்' கடிதம்:

'யானைக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றினேன்' என கட்டெறும்பு சொன்ன கதை போல, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் பேசியுள்ளார்.

'அ.தி.மு.க., கூட்டணியில் தென்மாவட்டங்களில் ஒரு தொகுதி கேட்டேன். அக்கட்சி தலைவர்கள், நானும், என் சமுதாயமும் வளர கூடாது என்ற நோக்கில் சென்னை, எழும்பூர் தொகுதியை தந்து, என்னை திட்டமிட்டு தோற்கடித்தனர்' என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.'லெட்டர் பேடு' கட்சிகளை வளர்த்து, பின் அக்கட்சிகளின் கேலி பேச்சுகளை தாங்கும் அளவிற்கு தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கடந்த கால் நுாற்றாண்டுகளாக தரம் தாழ்ந்து கிடக்கின்றன.

தோற்றாலும், ஜெயித்தாலும் குடைச்சல் தரும் இது போன்ற ஜாதி கட்சிகளின் கூட்டணி தேவை தானா என, திராவிட கழகங்கள் யோசிக்க வேண்டும்.அ.தி.மு.க., சொன்னது என்பதற்காக ஜான்பாண்டியன் ஏன் எழும்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும்?தென்மாவட்டங்களில் தனக்கு வெற்றி பிரகாசமாக இருக்கும் எனக் கருதியிருந்தால், அங்கே தனியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கலாமே...அதை விடுத்து, அ.தி.மு.க.,வின் முதுகில் சவாரி செய்து, இப்போது அக்கட்சியையே குறை சொல்லும் போக்கு சரி தானா?

இனி வரும் காலங்களிலாவது இத்தகைய ஜாதி, மத ரீதியான கட்சிகளை கூட்டணியில் சேர்த்து கொள்வதை, இரு திராவிட கட்சிகளும் நிறுத்தி கொள்ள வேண்டும்.ஏற்கனவே ஜாதி ரீதியாக தரம் பிரித்து தான் வேட்பாளர் அறிவிக்கப்படும் நிலையில், அப்புறம் ஏன் தனியாக ஒரு ஜாதி கட்சிக்கு வாய்ப்பு அளித்து, அதை வளர்த்து விட வேண்டும்?சுயமரியாதை வேண்டுமானால், இனிமேல் லெட்டர் பேடு கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க மாட்டோம் என அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.

மூலக்கதை