பாக்., 'ட்ரோன்' தாக்குதல் இந்தியா கடும் கண்டனம்

தினமலர்  தினமலர்
பாக்., ட்ரோன் தாக்குதல் இந்தியா கடும் கண்டனம்

ஜம்மு-ஜம்மு - காஷ்மீரில் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக, பாக்.,கிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.


ஜம்மு - காஷ்மீர் அருகே சர்வதேச எல்லையில் உள்ள சுசெட்கர் பகுதியில், இந்தியா -பாக்., எல்லை பாதுகாப்பு படை கமாண்டர்கள் நேற்று பேச்சு நடத்தினர்.இது குறித்து இந்திய எல்லை பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:முதன் முறையாக இரு நாடுகளின் எல்லை பாதுகாப்பு படைகளின் கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சு நடந்தது.

இதில் இந்திய எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., சுர்ஜித் சிங் மற்றும் பாக்., ரேஞ்சர்சின் சியால்கோட் கமாண்டர் முரத் உசேன் பங்கேற்றனர். அப்போது சமீபத்தில் ஜம்மு விமானப் படை தளத்தில் ட்ரோன் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்கள், எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.


இரு தரப்பு கமாண்டர்கள் இடையே எந்தவொரு பிரச்னை குறித்தும் உடனடியாக தகவல்களை பரிமாறி தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. சர்வதேச எல்லையில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை தொடர்ந்து பராமரிக்க இரு தரப்பும் முடிவு செய்தன. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை