எடியூரப்பா ராஜினாமா உறுதியான நிலையில் கர்நாடக புதிய முதல்வர் யார்?...பலர் போட்டியிடுவதால் பாஜ மேலிடம் குழப்பம்

தினகரன்  தினகரன்
எடியூரப்பா ராஜினாமா உறுதியான நிலையில் கர்நாடக புதிய முதல்வர் யார்?...பலர் போட்டியிடுவதால் பாஜ மேலிடம் குழப்பம்

பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்வது  உறுதியாகியுள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.  முதல்வர் பதவிக்கு லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்பட பலர்  போட்டியில் உள்ளதால் பாஜ மேலிடம் குழப்பம் அடைந்துள்ளது. கர்நாடக  முதல்வராக எடியூரப்பா பதவி வகித்து வருகிறார். இவருக்கு 78  வயதாகி விட்டதால், பாஜ கட்சியில் கொள்கை சிந்தாத்தப்படி பதவியில் இருந்து  விலக வேண்டும். இதை கர்நாடக பாஜ எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள்  மேலிடத்தில் வலியுறுத்தி வந்தனர். கடந்த  வாரம் டெல்லி சென்ற  எடியூரப்பா, பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை  அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்து  பேசினார். பின்னர், கட்சி மேலிடம்  கேட்டுக்கொண்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அறிவித்தார். இந்நிலையில், எடியூரப்பா பதவி விலகுவது உறுதியாகியுள்ளதால், முதல்வர் பதவியை பிடிக்கும் போட்டி கர்நாடக பாஜவில் சுறுசுறுப்படைந்து உள்ளது. 25க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் போட்டியில் இருப்பதால் பாஜ தலைமை குழப்பம் அடைந்துள்ளது. லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற வரிசையில், அரவிந்த் பெல்லத், பசவனகவுடா பாட்டீல் யத்னால், முருகேஷ் நிரானி ஆகியோரும், தற்போது துணை முதல்வர்களாக உள்ள லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயணா, கோவிந்த் கார்ஜோல், முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, உமேஷ் கத்தி ஆகியோரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஆனால், மேலிட பட்டியலில் முதல் பெயராக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பெயர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கட்சி பொறுப்பில் உள்ள பி.எல்.சந்தோஷ் பெயரும் இடம் பெற்றுள்ளது.நாளை ராஜினாமா?எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம்  நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு பிறகு பகல் 3 மணி அளவில் கவர்னரை  சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுப்பார் என்று கூறப்படுகிறது. இந்த பரபரப்பான  சூழ்நிலையில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நேற்று டெல்லியில் பாஜ  மேலிட தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

மூலக்கதை