இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

தினமலர்  தினமலர்
இன்றைய கிரைம் ரவுண்ட் அப்

இந்திய நிகழ்வுகள்



விமான ஊழியர்கள் கைது

புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் 72.46 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தியதாக, ஏழு பேரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் நால்வர் 'ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ' விமான நிறுவனங்களின் ஊழியர்கள் என, அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்

மின்னல் தாக்கி 5 பேர் பலி

பன்னா: மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் இரு பெண்கள், இரு முதியவர் உட்பட ஐந்து பேர் பலியாயினர். காயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கேஸ் சிலிண்டர் வெடித்து 9 பேர் பலி

ஆமதாபாத்-குஜராத்தில் 'காஸ்' சிலிண்டர் வெடித்ததில், நான்கு சிறார்கள் உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.குஜராத்தின் ஆமதாபாத் அருகே, ஒரு வீட்டில் திடீரென பயங்கர சத்தத்துடன் காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.

இந்த தீ விபத்தில், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை, தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் நான்கு சிறார்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: விபத்து நடந்த வீட்டில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் வசித்து வந்தனர்.

சம்பவத்தன்று இரவில் காஸ் அடுப்பை அணைக்காமல் விட்டுள்ளனர். இதனால் காஸ் கசிந்து, ஜன்னல் வழியே பக்கத்து வீட்டிற்கும் பரவியுள்ளது. இது குறித்து விசாரிப்பதற்காக அந்த வீட்டுக்காரர் கதவை தட்டியுள்ளார். துாக்கத்தில் இருந்து விழித்த ஒருவர், விளக்கு போட சுவிட்சை தட்டியுள்ளார். அப்போது தீப்பொறி கிளம்பி காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியுள்ளது. இது குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜார்க்கண்டில் அரசை கவிழ்க்க சதித் திட்டங்கள் தீட்டியதாக 3 பேர் கைது

ராஞ்சி-ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்க்க சதித் திட்டங்கள் தீட்டியதாக அரசு ஊழியர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்., மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் ராஞ்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மாநில அரசுக்கு எதிராக சிலர் சதித் திட்டங்களை தீட்டி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.இதையடுத்து நேற்று அந்த ஓட்டலில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசார், அங்கிருந்த அபிஷேக் துாபே, அமித் சிங் மற்றும் நிவாரண் பிரசாத் மஹாதோ என்ற மூன்று பேரை கைது செய்தனர்.

இதில் அபிஷேக் மற்றும் அமித் ஆகிய இருவரும் அரசு ஊழியர்கள். நிவாரண் பிரசாத் மதுபான விற்பனையாளர் என தெரியவந்தது.இவர்கள் மூவரும் சேர்ந்து, மாநில அரசை கவிழ்க்க சதித் திட்டங்களை வகுத்து வந்தது விசாரணையில் அம்பலமானது. அவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இந்த விவகாரத்தில் பா.ஜ., மீது, ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா குற்றஞ்சாட்டி உள்ளது. இது குறித்து, கட்சியின் பொதுச் செயலர் சுப்ரியா பட்டாச்சார்யா கூறியதாவது:கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்தில் செய்தது போல் ஜார்க்கண்டிலும் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ., முயற்சித்து வருகிறது. எனினும் அதை நாங்கள் நடக்க விடமாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக நிகழ்வுகள்

'‛ஹசீஸ்' கடத்த முயன்ற இலங்கை நபர் கைது

துாத்துக்குடி:துாத்துக்குடிக்கு ஹசீஸ் போதைபொருள் கடத்த முயன்ற இலங்கை நபர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

துாத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 24 கிலோ ஹசீஸ் எனப்படும் போதைப் பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றினர். துாத்துக்குடியை சேர்ந்த இருவரை பிப்.4ல் கைது செய்தனர். இலங்கைக்கு கடத்த திட்டமிட்ட இலங்கை நபர் வசந்தன் என்ற பிரசாந்த் சென்னையில் தலைமறைவாக இருந்தார். நேற்று மத்திய போதைபொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.

11.75 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விருதுநகர்--சிவகாசி தாசில்தார் ராஜ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாண்டி தலைமையில் ஆனைக்குட்டம் அருகே வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக சென்ற லாரியை சோதித்ததில் 11.75 டன் எ ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. லாரியை ஓட்டி வந்த மதுரை அனுப்பானடியை சேர்ந்த மலைமன்னன் 36,கைதுசெய்யப்பட்டார். லாரி உரிமையாளர் தப்பினார். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூடைகளை இன்ஸ்பெக்டர் பிரியா சிவகாசி கிட்டங்கியில் ஒப்படைத்தார். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகாசியில் சீட்டு நடத்தி மோசடி: மாஜி ராணுவ வீரர் வீடு முற்றுகை
சிவகாசி-சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் 45, மாதாந்திர சீட்டு நடத்தி பலரிடம் மோசடி செய்த நிலையில், அவரது வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டும் தராததால் போலீசிலும் புகார் கொடுத்துள்ளனர். பணத்தை கேட்டு பலரும் தொந்தரவு கொடுக்க ரமேஷ் தலைமறைவானார். இதனிடையே அவர் வீட்டிற்கு வந்துள்ளதாக தகவல் பரவ, பணம் கொடுத்தவர்கள் நேற்று காலை 6:00 மணிக்கு ரமேஷ் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாபுபிரசாந்த் டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூற கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து பணம் கொடுத்தவர்கள் 27 பேரிடம் போலீசார் புகாரினை பெற்றனர்.

கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது

பெரியகுளம்-பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் அருண்குமார் 24. பங்களாபட்டியைச் சேர்ந்தஇவரது நண்பர் மதன்குமார் 23.
இருவரும் முருகமலை அடிவாரம் பூசணிமலையில்சின்னன் என்பவரது மாந்தோப்பில் நடுவதற்கு 15 முதல் 25 செ.மீ., உயரம் வரை வளர்ந்த, 22 செடிகளை பாலிதீன் கவரில் வளர்த்துள்ளனர். வடகரை போலீசார் இருவரையும் கைது செய்து கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

செலவுக்கு பணம் கேட்டு தந்தையை அடித்த மகன்

பெரியகுளம்-பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட்பாங்க் காலனியைச்சேர்ந்தவர் அக்பர்அலி 58. வெளியூரிலிருந்து வந்தஇவரது மகன் தைபிக்ராஜா 27, இவரது மனைவி அஜ்மத் ஆகியோர், அக்பர் அலியிடம் செலவிற்கு ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளனர். பணம் இல்லை என கூறிய அவரை, தைபிக்ராஜா அடித்துள்ளார். அவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடகரை போலீசார் தைபிக்ராஜாவை தேடி வருகின்றனர்.

காரில் 21 மூடை ரேஷன் அரிசி கடத்தல்

திருப்புத்துார்--திருப்புத்துார் அருகே சின்னகுன்றக்குடியில் காரில் கடத்தி வந்த 21 மூடை (756 கிலோ) ரேஷன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது.திருப்புத்துார் வட்ட வழங்கல் அலுவலர் நாகநாதன் தலைமையில் தனிப்படையினர் சின்ன குன்றக்குடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 11:30 மணிக்கு பள்ளத்துார் சாலையில் காரை மறித்து சோதித்தனர். அதில் 21 மூடையில் 756 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வதை கண்டுபிடித்து கார் மற்றும் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர்.காரைக்குடிபள்ளத்துாரில் தாசில்தார் பாலகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேன் அதிகாரிகளை பார்த்ததும் நிற்காமல் சென்றது. வாகனத்தை பிடித்த தாசில்தார் அதில் இருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார்.அரிசி ஆலைக்கு ரேஷன் அரிசி கொண்டு சென்றது தெரியவந்தது. அரிசியை கடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்துக் கடவுள்கள், பிரதமர், அமைச்சர் பற்றி அவதூறாக பேசிய பாதிரியார் கைது
மதுரை: ஹிந்து கடவுள்கள் மற்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்து மோசமாக விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நேற்று கைது செய்யப்பட்டார். குமரியில் இருந்து சென்னைக்கு தப்பிச் செல்லும் வழியில், மதுரையில் போலீசாரிடம் சிக்கினார். பல்வேறு அமைப்புகள் அளித்த நெருக்கடியால், அவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசுகையில், 'அமைச்சர் சேகர்பாபுவுக்கு மட்டுமல்ல, மனோ தங்கராஜுக்கும் சேர்த்து சொல்கிறேன்.'எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுக்காமல் போய் சாமி கும்பிட்டாலும், ஒருவர் கூட ஓட்டு போடப் போவதில்லை.'மண்டைக்காடு அம்மனின் பக்தர்களும் ஓட்டு போடப் போவதில்லை; ஹிந்துக்களும் ஓட்டு தரப்போவது இல்லை. நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்றால் அது கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் போட்ட பிச்சை. 'பூமாதேவியை மிதிக்கக் கூடாது என்பதற்காக, எம்.எல்.ஏ., காந்தி செருப்பு போட மாட்டாராம். நாம், பாரத மாதாவின் அசிங்கம் நம்மிடம் தொற்றிக்கொள்ளக் கூடாது என்பதற்காக 'ஷூ' போட்டு மிதிக்கிறோம்' என்றார்.

மேலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். பல்வேறு அமைப்புகளின் தொடர் புகார்களை அடுத்து, அவர் மீது ஜாதி, மத விரோத உணர்வுகளை துாண்டுதல் உட்பட ஏழு பிரிவுகளில், அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதையடுத்து, தலைமறைவான ஜார்ஜ் பொன்னையா, நேற்று காலை சென்னைக்கு காரில் தப்பிச் சென்றார். அவருடன் மூன்று பேர் சென்றனர். அவர்களது அலைபேசி சிக்னலை வைத்து, மதுரை பாண்டி கோவில் ரிங் ரோடு பகுதியில், மதுரை மாவட்ட போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின் கள்ளிக்குடி ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டு, கன்னியாகுமரி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஒரு மணி நேரம் விசாரணை

மதுரை எஸ்.பி., பாஸ்கரன் கூறுகையில், ''நேற்று அதிகாலை மதுரை மேலுார் வரை காரில் சென்று, மீண்டும் பாண்டி கோவில் பகுதிக்கு திரும்பி வந்த போது அவரை கைது செய்தோம். சென்னை செல்ல திட்டமிட்டு மதுரை வந்துள்ளார்,'' என்றார். மதுரையில் கைது செய்யப்பட்ட ஜார்ஜ் பொன்னையா, கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரிடம் தனிப்படை போலீசார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பின், குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை நடத்திய பின், குழித்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பாதிரியார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'பாதிரியார் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். எனவே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்' என, வாதிட்டனர். அரசு தரப்பில இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.பின், அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் திருநெல்வேலி சிறையில் அடைக்க, நீதிபதி செல்வம் உத்தரவிட்டார். பாதிரியார் சிறையில் அடைக்கப்பட்டார்.

போக்சோவில் எட்டு பேர் கைது
ஓசூர்:அஞ்செட்டி அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் உட்பட எட்டு பேரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே பேடரஹள்ளியைச் சேர்ந்தவர் கேசவன், 21; கூலி தொழிலாளி; மகள் உறவு முறையான, 17 வயதான பிளஸ் 2 மாணவியை காதலித்தார்.கடந்தாண்டு டிசம்பரில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, பலாத்காரம் செய்ததில் மாணவி கர்ப்பமானார். மே 17ல் கர்ப்பத்தை கலைக்க செய்தார். மாணவியின் தாய் தட்டிக் கேட்டதால், உறவினர்களுடன் மிரட்டல் விடுத்தார்.

வாணியம்பாடி அருகே பைனான்சியரை தாக்கி ரூ 25 லட்சம் கொள்ளை

வாணியம்பாடி:காரில் சென்ற பைனான்சியரை தாக்கி 25 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றாம்பள்ளியைச் சேர்ந்தவர் ஞானசேகரன், 45. இவர் வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டில் பைனான்ஸ் நிறுவனம் நடத்துகிறார். நேற்று அதிகாலை 1:00 மணிக்கு குடியாத்தத்தில் இருந்து, நாட்றாம்பள்ளியில் உள்ள வீட்டுக்கு, 25 லட்சம் ரூபாயை காரில் எடுத்து சென்றார்.அவரது நண்பர் பாலாஜி, 43 காரை ஓட்டினார்.

வாணியம்பாடி அருகே மாரப்பட்டில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, போலீஸ் உடையில் காரில் வந்த ஆறு பேர் ஞானசேகரன் காரை நிறுத்தி, இரும்பு ராடால் தாக்கி காரில் இருந்த, 25 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்தனர்.அப்போது, கொள்ளையர்கள் வந்த காரின் சாவியை பாலாஜி பறித்து, 100 அடி பள்ளத்தில் துாக்கி வீசினார். இதனால், கொள்ளையர்கள் காரை விட்டு பணத்துடன் தப்பினர்.

வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதியில் நிறைய சூதாட்ட விடுதிகள் உள்ளன. அதில், மோசரப்பள்ளி விடுதியில் நடந்த சூதாட்டத்தில் ஞானசேகரன் வென்ற, 25 லட்சம் ரூபாயுடன் வீட்டுக்கு சென்றபோது, பின் தொடர்ந்து வந்த கும்பல் கொள்ளை அடித்துள்ளது. கொள்ளையர்கள் பயன்படுத்திய காரில் வக்கீல் என, 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருந்தது. தமிழக பதிவு எண் கொண்ட காரில், போலியாக கர்நாடக மாநில பதிவெண் தயாரித்து ஒட்டியுள்ளனர்.

காருக்குள் பான் கார்டு, ஆதார் அட்டைகள், பத்திரிகையாளர் அடையாள அட்டை, போலீசார் பயன்படுத்தும் தொப்பி இருந்தன. இரண்டு தனிப்படை அமைத்து, கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பேர்ணாம்பட்டு பகுதியில் உள்ள விடுதிகளில் சூதாட்டம் நடக்கிறது. அதை தடுக்க தவறிய பேர்ணாம்பட்டு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், 50 தனிப்பிரிவு போலீஸ் செல்வராஜ், 40 ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி, வேலுார் எஸ்.பி., செல்வகுமார் உத்தரவிட்டார்.

தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் தாய் புகார் செய்தார். 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்த போலீசார், கேசவன், 21, மிரட்டல் விடுத்த உறவினர்கள் ஏழு பேர் என எட்டு பேரை கைது செய்தனர்.

மூலக்கதை