இந்தோனேசியாவுக்கு 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: இந்தியா வழங்கல்

தினமலர்  தினமலர்
இந்தோனேசியாவுக்கு 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: இந்தியா வழங்கல்

புதுடில்லி: இந்தோனிசியாவுக்கு கொரோனா நிவாரண உதவியாக இந்தியா 5 கிரையோஜனிக் கொள்கலன்களில் 100 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் மற்றும் 300 செறிவூட்டிகளை வழங்கியுள்ளது.


இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தீவிரம் அடைந்து வருகிறது. டெல்டா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதனால் மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை கார் பார்க்கிங்கில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரிய சிகிச்சை கிடைக்காமல் பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்தியா உட்பட பல நாடுகளிடம் இந்தோனேசியா உதவி கோரியுள்ளது. இதனையடுத்து இந்தியா சார்பில், கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள் இந்தோனேசியாவுக்கு ஐ.என்.எஸ். ஐராவத் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐராவத் கப்பல், கொரோனா நிவாரண உதவிகளுடன் இந்தோனேசியாவின் ஜகார்தா துறைமுகத்தை இன்று சென்றடைந்தது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தோனேசியாவிற்கு 5 கிரையோஜனிக் கொள்கலன்களில் 100 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் மற்றும் 300 செறிவூட்டிகளை இந்தக் கப்பல் கொண்டு சென்றுள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு வழங்கும் நடவடிக்கைகளிலும், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பல்வேறு நிவாரண உதவிகளை அளிக்கும் பணிகளிலும் இந்தக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை