ரெய்டு' எதிர்பார்த்ததே: விஜயபாஸ்கர்

தினமலர்  தினமலர்
ரெய்டு எதிர்பார்த்ததே: விஜயபாஸ்கர்

கரூர் : ''லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ரெய்டு நடவடிக்கை எதிர்பார்த்ததுதான். தி.மு.க., அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை, சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்,'' என, போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

கரூரில் அவர் அளித்த பேட்டி:கடந்த 22ம் தேதி சென்னை, கரூரில் உள்ள இல்லம், அலுவலகம் மற்றும் நண்பர்கள், உதவியாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர். அதில் பணம், ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். இது, தி.மு.க., அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. இதற்கு, முன்னாள் முதல்வர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துஉள்ளனர்.
பணம், ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார், சம்மன் அனுப்பினால் முறையான பதில் தரப்படும்.என்னுடைய வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், லாக்கர் சோதனை செய்யப்படுவதாகவும் வந்த தகவல்களில் உண்மை இல்லை.சில, 'டிவி'க்கள் மற்றும் 'ஆன்லைன்' பத்திரிகைகளில் என்னை பற்றி தவறான செய்திகளை வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

ரெய்டு நடவடிக்கை எதிர்பார்த்தது தான். அதை, நீதிமன்றத்தில் சட்டரீதியாக சந்திப்போம். சென்னையிலும், கரூரிலும் எனக்கு சொந்த வீடு கிடையாது.வாடகை வீடு தான். 35 ஆண்டுகளாக சாயப்பட்டறை, கிரஷர், டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறேன். அதற்கு எல்லாம் முறையான கணக்கு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


மூலக்கதை