ஹிந்து கடவுள், மோடி பற்றி விமர்சித்த பாதிரியார் கைது!

தினமலர்  தினமலர்
ஹிந்து கடவுள், மோடி பற்றி விமர்சித்த பாதிரியார் கைது!

மதுரை: ஹிந்து கடவுள்கள் மற்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்து மோசமாக விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நேற்று கைது செய்யப்பட்டார். குமரியில் இருந்து சென்னைக்கு தப்பிச் செல்லும் வழியில், மதுரையில் போலீசாரிடம்
சிக்கினார். பல்வேறு அமைப்புகள் அளித்த நெருக்கடியால், அவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சை கருத்துகன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசுகையில், 'அமைச்சர் சேகர்பாபுவுக்கு மட்டுமல்ல, மனோ தங்கராஜுக்கும் சேர்த்து சொல்கிறேன்.'எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுக்காமல் போய் சாமி கும்பிட்டாலும், ஒருவர் கூட ஓட்டு போடப் போவதில்லை.
'மண்டைக்காடு அம்மனின் பக்தர்களும் ஓட்டு போடப் போவதில்லை; ஹிந்துக்களும் ஓட்டு தரப்போவது இல்லை. நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்றால் அது கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் போட்ட பிச்சை. 'பூமாதேவியை மிதிக்கக் கூடாது என்பதற்காக, எம்.எல்.ஏ., காந்தி செருப்பு போட மாட்டாராம். நாம், பாரத மாதாவின் அசிங்கம் நம்மிடம் தொற்றிக்கொள்ளக் கூடாது என்பதற்காக 'ஷூ' போட்டு மிதிக்கிறோம்' என்றார்.

மேலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். பல்வேறு அமைப்புகளின் தொடர் புகார்களை அடுத்து, அவர் மீது ஜாதி, மத விரோத உணர்வுகளை துாண்டுதல் உட்பட ஏழு பிரிவுகளில், அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதையடுத்து, தலைமறைவான ஜார்ஜ் பொன்னையா, நேற்று காலை சென்னைக்கு காரில் தப்பிச் சென்றார். அவருடன் மூன்று பேர் சென்றனர். அவர்களது அலைபேசி சிக்னலை வைத்து, மதுரை பாண்டி கோவில் ரிங் ரோடு பகுதியில், மதுரை மாவட்ட போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின் கள்ளிக்குடி ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டு, கன்னியாகுமரி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஒரு மணி நேரம் விசாரணைமதுரை எஸ்.பி., பாஸ்கரன் கூறுகையில், ''நேற்று அதிகாலை மதுரை மேலுார் வரை காரில் சென்று, மீண்டும் பாண்டி கோவில் பகுதிக்கு திரும்பி வந்த போது அவரை கைது செய்தோம். சென்னை செல்ல திட்டமிட்டு மதுரை வந்துள்ளார்,'' என்றார். மதுரையில் கைது செய்யப்பட்ட ஜார்ஜ் பொன்னையா, கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரிடம் தனிப்படை போலீசார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பின், குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை நடத்திய பின், குழித்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பாதிரியார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'பாதிரியார் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். எனவே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்' என, வாதிட்டனர். அரசு தரப்பில இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.பின், அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் திருநெல்வேலி சிறையில் அடைக்க, நீதிபதி செல்வம் உத்தரவிட்டார். பாதிரியார் சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டத்திற்கு கோரிக்கைஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
பாதிரியார் ஜான் பொன்னையா, ஹிந்து மதத்தையும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரையும் மிகவும் கொச்சையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
கடந்த காலங்களில், இதுபோல் பிற மதங்களுக்கு எதிராக பேசிய பலர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஜான் பொன்னையாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.இதை வலியுறுத்தி, 26ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகா அலுவலகங்கள் முன், தர்ணா போராட்டம் நடத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாதிரியாரை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்சென்னை: தேச ஒற்றுமைக்கு எதிராக பேசிய கிறிஸ்துவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில் நேற்று மாநிலம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜார்ஜ் பொன்னையாவை உடனே கைது செய்ய வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் தமிழக பா.ஜ., சார்பில் நேற்று காலை, கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை, ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவரை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும், பா.ஜ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

சென்னையில் கலெக்டர் அலுவலகம்; புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி; வில்லிவாக்கம் பஸ் ஸ்டாண்ட் அருகில், அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், பா.ஜ., மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.

மூலக்கதை