மஹாராஷ்டிராவை புரட்டி எடுக்கும் கன மழை

தினமலர்  தினமலர்
மஹாராஷ்டிராவை புரட்டி எடுக்கும் கன மழை

மும்பை:மஹாராஷ்டிர மாநிலத்தில் கன மழை காரண மாக, பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி, 138 பேர் உயிரிழந்துள்ளனர். எட்டு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். மீட்பு பணிகளில் ராணுவம் களம் இறங்கிஉள்ளது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் கடலோர பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது.

மும்பை, தானே உள்ளிட்ட நகரங்கள் மட்டு மின்றி ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இரண்டு நாட்களாக கொட்டிய கன மழையால், ராய்காட், ரத்னகிரி, பால்கர், தானே, சிந்து துர்க், கோலாப்பூர், சங்லி மற்றும் சதாரா ஆகிய மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். கொங்கன் பகுதியின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ராய்கர் மாவட்டம் தலாய் கிராமத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் 36 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேற்கு பகுதியில் அமைந்துள்ள சதாரா மாவட்டத்தில் 27 பேர் இறந்துள்ளனர். அம்பேகர் மற்றும் மிர்கான் ஆகிய கிராமங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இடைவிடாத மழையால் பல இடங்களில் பழைய கட்டடங்கள் இடிந்து விழுந்தன. நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கால் மாநிலம் முழுதும் இதுவரை 138 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர்.

அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணை மற்றும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன.புனேயை சுற்றியுள்ள 54 கிராமங்கள் வெள்ளத்தில் முற்றிலும் மூழ்கியுள்ளன. கோலாப்பூரில் 821 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளப் பெருக்கில் சிக்கி ஏராளமான கால்நடைகளும் பலியாகியுள்ளன.

ரூ.5 லட்சம் நிவாரணம்தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ராணுவத்தின் ஆறு குழுக்களும் மீட்புப் பணியில் களம் இறங்கியுள்ளன. பலியானோர் குடும்பத்துக்கு, தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும், காயம் அடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கவும், முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார்.ராய்கர், கோலாப்பூர் உட்பட ஆறு மாவட்டங்களில் கன மழை தொடரும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படியும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் 8 மீட்புக் குழு

தேசிய பேரிடர் மீட்பு படையின் 18 குழுக்களும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. ஒடிசா மாநிலத்தில் இருந்து மேலும் எட்டு குழுக்கள், மஹாராஷ்டிராவின் கடலோர மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் மும்பை, ரத்னகிரி, தானே, பால்கர், ராய்காட், சதாரா, சங்லி, சிந்து துர்க், கோலாப்பூர் மற்றும் நாக்பூர் ஆகிய பகுதிகளில் களம் இறங்கியுள்ளனர். ஒரு குழுவில் 47 வீரர்கள் இருப்பர். ஒவ்வொரு குழுவிலும் மிதவைப் படகுகள், மரம் வெட்டும் கோடரி, ஏணி, கயிறு உட்பட மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இருக்கும்.

மூலக்கதை