எல்லையில் சீனாவின் அத்துமீறல் முயற்சிக்கு 'செக்!

தினமலர்  தினமலர்
எல்லையில் சீனாவின் அத்துமீறல் முயற்சிக்கு செக்!

புதுடில்லி : கிழக்கு லடாக் எல்லையில் சீனாவின் ஆக்ரோஷமான அத்துமீறல் முயற்சிகளுக்கு நம் ராணுவம் 'செக்' வைத்துள்ளது. கடும் பனி மற்றும் மலைகளில் பயிற்சி பெற்றுள்ள பயங்கரவாத தடுப்புப் படையைச் சேர்ந்த 15 ஆயிரம் வீரர்கள் எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நம் அண்டை நாடான சீனாவின் ராணுவம், கிழக்கு லடாக்கில் கடந்தாண்டு மே மாதம் அத்துமீறி நுழைந்து, ஆக்கிரமிக்க முயன்றது. நம் படையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பதற்றமான சூழல்


இரு படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் நம் ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர். நம் ராணுவத்தினர் தாக்குதலில், சீன ராணுவத்தைச் சேர்ந்த 45க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவியது. பல சுற்று பேச்சுக்குப் பின் ஒரு சில இடங்களில் இருந்து இரு நாட்டு படைகளும் திரும்பப் பெறப்பட்டன. ஆனால் மேலும் பல இடங்களில் சீன ராணுவம் தொடர்ந்து முகாமிட்டுள்ளது. அவர்களை முன்னேற விடாமல் நம் ராணுவமும் எல்லையில் முகாமிட்டுள்ளது.இந்நிலையில் சீன ராணுவத்தின் ஆக்ரோஷமான அத்துமீறல் நடவடிக்கைகளை தடுக்க, நம் ராணுவம் புதிய யுக்தியை கையாண்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.இது குறித்து நம் ராணுவத்தின் உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:நம் ராணுவத்தின் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த பயங்கரவாத தடுப்புப் படையினர், எல்லை பாதுகாப்பு பணிக்கு திருப்பி விடப்பட்டனர். இவ்வாறு 15 ஆயிரம் வீரர்கள் எல்லையில் நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டு
உள்ளனர்.

கடும் பனி



இவர்கள் கடுமையான பனி, மலைப் பிரதேசங்களில் பயிற்சி பெற்றவர்கள். கடும் பனி படர்ந்துள்ள கிழக்கு லடாக் எல்லையில் இந்தப் படையினர், கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக் கூடிய இந்தப் படையினர் எல்லையில் இருப்பது நமக்கு மிகவும் சாதகம். சீன ராணுவம் வாயிலாக எந்த அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் சாமர்த்தியம், திறமை, இந்தப் படையினருக்கு உள்ளது.ஒரு விதத்தில் இவர்கள் எல்லையில் இருப்பது எதிர் நாட்டுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது. மேலும், எல்லையில் பணியாற்ற வேண்டிய 15 ஆயிரம் வீரர்கள் தற்போது எந்த நேரத்திலும் தயார் நிலையில் உள்ளனர். தேவைப்படும் நேரத்தில் அவர்களுக்கு எல்லைப் பணி வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

லடாக்கில் ஜனாதிபதி



ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.இந்த யூனியன் பிரதேசங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. மத்திய அரசு வாயிலாக மாநில நிர்வாகம், பல வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மூன்று நாள் பயணமாக ஜம்மு - காஷ்மீர், லடாக்குக்கு பயணம் மேற்கொள்கிறார்.

கார்கில் போரில் வென்றதன் 22வது ஆண்டையொட்டி 'லடாக்'கில் உள்ள நினைவிடத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலையின் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளதாக, ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை