'கொரோனா மூன்றாவது அலையில் பாதிப்பு குறைவாகவே இருக்கும்'

தினமலர்  தினமலர்
கொரோனா மூன்றாவது அலையில் பாதிப்பு குறைவாகவே இருக்கும்


புதுடில்லி :''கொரோனா மூன்றாவது அலை பரவல் தாமதமாகலாம்; ஆனாலும் முதல் இரண்டு அலைகளுடன் ஒப்பிடும்போது மூன்றாவது அலையில் பாதிப்பு குறைவாகவே இருக்கும்,'' என, எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்தார்.

கொரோனா மூன்றாவது அலை குறித்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா கூறியதாவது: நம் நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவல் பெரிதும் குறைந்துள்ளது. மூன்றாவது அலை பரவல் தாமதமாகலாம். எனினும் முதல் இரண்டு அலைகளுடன் ஒப்பிடும் போது, மூன்றாவது அலையின் பாதிப்பு குறைவாகவே இருக்கும்; இதற்கு பல காரணங்கள் உள்ளன.முக்கியமாக நாட்டில் 67 சதவீத மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. இரண்டாவது தடுப்பூசி போடப்படுவதும் நமக்கு பாதுகாப்பை தரும்.

கொரோனா தடுப்பு விதிகளை முறையாக, முழுமையாக கடைப்பிடித்தால் மூன்றாவது அலையில் பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் செய்துவிடலாம். தடுப்பூசி போடும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். மக்களிடம் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் உள்ளது கவலைஅளிக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் கொரோனாவால் இறப்பதையும், மருத்துவனைமயில் சேர்க்க வேண்டிய அவசியத்தையும் தவிர்க்க முடியும். வரும் மாதங்களில்
தடுப்பூசி போடப்படும் வேகம் அதிகப்படுத்தப் படும்.இந்த ஆண்டு இறுதி யில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போடப்பட்டிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசிஎய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா கூறியதாவது:தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த 'பாரத் பயோடெக்' நிறுவனம் குழந்தைகளுக்காக தயாரித்துள்ள 'கோவாக்சின்' தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கும் மூன்றாவது கட்ட பரிசோதனை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சமீபத்தில் துவங்கியது. மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பின் நிபுணர் குழு அனுமதியளித்து உள்ளதைத் தொடர்ந்து இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிறுவனம் இரண்டு கட்ட பரிசோதனைகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.மூன்றாம் கட்ட பரிசோதனை முடிந்த கையோடு கோவாக்சின் தடுப்பூசியை 2 வயது முதலான குழந்தைகளுக்கு செலுத்த, மத்திய அரசின் அனுமதியும் கிடைக்கும். மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் செப்.,ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் செப்., மாதத்திலிருந்து 2 - 17 வயது வரை உடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை