பா.ஜ., தலைவர்களுக்கு பிரதமர் மோடி 12 கட்டளை

தினமலர்  தினமலர்
பா.ஜ., தலைவர்களுக்கு பிரதமர் மோடி 12 கட்டளை

'கட்சியிலும், சமூகத்திலும் நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்த வேண்டும்' என, பா.ஜ., தலைவர்களிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இதற்காக புத்தகம் படித்து விவாதித்தல், கிராமங்களில் துாய்மை பணி மேற்கொள்ளுதல், கிராமங்களில் விழா நடத்துதல் உள்ளிட்ட 12 கட்டளைகளை செயல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

குஜராத் முதல்வராக இருந்த போதும், தற்போது பிரதமராக உள்ள போதும் மக்களை கவர்வதில் புதுவிதமான நடவடிக்கைகளை மோடி செயல்படுத்தி வருகிறார். பா.ஜ., மூத்த தலைவர்களும், மக்கள் சேவையில் நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும் என, பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.


நல்ல பழக்க வழக்கம்டில்லியில் சமீபத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள் கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், தேசிய பொதுச் செயலர்கள், செயலர்கள் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:மத்தியிலும், பல மாநிலங்களிலும் நாம் ஆட்சியில் இருக்கிறோம். அதனால், மக்களுக்கு சேவை செய்வதில் நமக்கு அதிக கடமைகள் உள்ளன.

மக்கள் சேவை செய்வதன் வாயிலாக கட்சியிலும், சமூகத்திலும் சில நல்ல பழக்க வழக்கங்களை நாம் ஏற்படுத்த வேண்டும்.கொரோனா வைரஸ் தொற்று பரவல் காலத்தில் வாழ்கிறோம். இந்த காலத்தில் தான் நம் பணி மிகவும் அதிகரித்துஉள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகமாக இருந்த நேரத்தில், மக்கள் சேவையில் பா.ஜ.,வினர் சிலர் முழுமையாக ஈடுபடாதது வருத்தம் அளிக்கிறது.மக்கள் சேவையில் ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. பா.ஜ., தலைவர்களும், தொண்டர்களும் வாரம் ஒரு நாள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று, அங்கு மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி போடும் மையங்களுக்கும் செல்ல வேண்டும். மக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும்.

மகிழ்ச்சிதொண்டர்களிடம் தலைவர்கள் நெருங்கி பழக வேண்டும். வயதாகிவிட்டதால் ஓய்வெடுத்து வரும் நீண்ட கால தொண்டர்களை நேரிலோ அல்லது போனிலோ தொடர்பு கொண்டு பேச வேண்டும். அதனால், கட்சியில் தொண்டர்களிடம் நெருக்கம் ஏற்படும். கொரோனா ஊரடங்கு காலத்தில், என் பொது வாழ்வின் துவக்க காலத்தில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வில் இணைந்து பணியாற்றிய பலரை தொடர்பு கொண்டு பேசினேன். அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மக்களை தொடர்பு கொள்வதில் நாம் புதுமைகளை செயல்படுத்த வேண்டும். மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும்.

குஜராத் முதல்வராக இருந்த போது, மாதத்தில் ஒரு நாள் புத்தகம் படிப்பதற்காக ஒதுக்கி வந்தேன். படித்த புத்தகத்தை கட்சியினருடன் விவாதிப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். பா.ஜ., நிர்வாகிகளும் புத்தகம் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும். படித்த புத்தகத்தை கட்சியினர் மற்றும் மக்களுடன் விவாதிக்க வேண்டும். இதன் வாயிலாக கட்சியின் சிந்தனைகளை மக்களிடம் பரப்பலாம்.கிராமங்களுக்கு அடிக்கடி சென்று மக்களை சந்திக்க வேண்டும். அங்கு மாதத்தில் ஒரு நாள் துாய்மை பணி மேற்கொள்ளலாம்; விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம்.

ஆர்வம்இதில் கிராமத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களையும் பங்கேற்க வைக்க வேண்டும். அப்போது, மக்களிடம் மத்திய அரசின் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துக் கூற வேண்டும். மத்திய அரசின் நலத்திட்டங்களை கட்சியின் தலைவர்கள், செயலர்கள் ஒளிவு மறைவின்றி மதிப்பிட வேண்டும். திட்டங்களில் சாதகமான விஷயங்களை குறிப்பிடுவதுடன், பாதகமான விஷயங்களையும் குறிப்பிட்டு, எனக்கு தெரிவிக்க வேண்டும். மக்கள் தொடர்பிலும், சேவையிலும் நாம் காட்டும் ஆர்வம் தான் கட்சியை வலுப்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு பிரதமர் பேசினார்.

வழி நடத்தும் ஆசான்இந்த கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ., மூத்த தலைவர்கள் சிலர் கூறியதாவது:எங்களை வழி நடத்துவதில் பிரதமர் மோடி எப்போதுமே எங்களுக்கு ஆசானாக உள்ளார். மக்கள் சேவை செய்வதின் முக்கியத்துவத்தை பிரதமர் உணர்த்தினார்.பிரதமரின் 'மன் கி பாத்' நிகழ்ச்சி கிராம மக்களிடம் சென்றடைந்துள்ளதை தெரிவித்த தலைவர்கள், மன் கி பாத் நிகழ்ச்சி, மத்திய அரசுடன் மக்களை நெருங்க வைத்துள்ளதையும் தெரிவித்தனர். பிரதமர் கூறிய அறிவுரைகளை ஏற்று, மக்கள் சேவையை தொடர்வோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது சிறப்பு நிருபர் -

மூலக்கதை