இரண்டு இயக்குனர்களை நீக்கி தானே இயக்குனரான விஜய் ஆண்டனி

தினமலர்  தினமலர்
இரண்டு இயக்குனர்களை நீக்கி தானே இயக்குனரான விஜய் ஆண்டனி

சசி இயக்கத்தில் ஜீவா, காதல் சந்தியா நடிப்பில் வெளிவந்த 'டிஷ்யூம்' படத்தில் தான் விஜய் ஆண்டனி முதன் முதலில் இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். ஆனால், விஜய் அப்பா எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, அனிதா நடித்த 'சுக்ரன்' படம் தான் முதலில் வெளிவந்தது.

தொடர்ந்து விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' உட்பட பல படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த விஜய் ஆண்டனி 'நான்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 'சலீம், இந்தியா பாகிஸ்தான்' என இரண்டு படங்களில் நாயகனாக நடித்தாலும் சசி இயக்கத்தில் வெளிவந்த 'பிச்சைக்காரன்' படம்தான் விஜய் ஆண்டனிக்கு பெரும் திருப்புமுனையான படமாக அமைந்தது. தற்போது 'கோடியில் ஒருவன், தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இன்று 'பிச்சைக்காரன் 2' படத்தை தானே இயக்கப் போவதாக அறிவித்து படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். ஆனால், இந்தப் படத்திற்கான முதல் அறிவிப்பு வெளியான போது 'பாரம்' படத்தை இயக்கிய பிரியா கிருஷ்ணசாமி இயக்கப் போவதாக அறிவித்தார்கள். 2018ம் ஆண்டிற்கான சிறந்த பிராந்திய மொழித் திரைப்பட விருதைப் பெற்ற படம் தான் 'பாரம்'.

அதற்குப் பிறகு 'கோடியில் ஒருவன்' படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றின் போது, அந்தப் படத்தின் இயக்குனரான ஆனந்த் கிருஷ்ணா 'பிச்சைக்காரன் 2' படத்தை இயக்குவார் என்று தெரிவித்தார்.

ஆனால், இப்போது அவரும் மாற்றப்பட்டு தானே படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார் விஜய் ஆண்டனி. ஒரு படத்திற்காக இரண்டு இயக்குனர்களை முதலில் அறிவித்துவிட்டு பின்னர் அவர்களிருவரையும் நீக்கி அவரே இயக்குனரானது ஏன் என்பதன் காரணம் விரைவில் தெரிய வரும்.

'பிச்சைக்காரன்' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய சசியிடமே இரண்டாம் பாகத்தையும் இயக்கக் கேட்ட போது, அவர் அதற்கான சரியான கதை தன்னிடம் இல்லை என மறுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

'பிச்சைக்காரன் 2' படத்திற்கான கதை, திரைக்கதையை விஜய் ஆண்டனியே எழுதியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல். இசையமைப்பாளர், பாடகர், நடிகர், எடிட்டர் ஆகியவற்றைத் தொடர்ந்து இயக்கத்தையும் ஒரு கை பார்க்கத் தயாராகிவிட்டார் விஜய் ஆண்டனி.

மூலக்கதை