கோவிட் நிவாரண உதவிப் பொருட்களுடன் இந்தோனேசியா சென்றடைந்தது ஐஎன்எஸ் ஐராவத் கப்பல்

தினகரன்  தினகரன்
கோவிட் நிவாரண உதவிப் பொருட்களுடன் இந்தோனேசியா சென்றடைந்தது ஐஎன்எஸ் ஐராவத் கப்பல்

டெல்லி : இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐராவத் கப்பல், கோவிட் -19 நிவாரண உதவிகளுடன் இந்தோனேசியாவின் ஜகார்தா துறைமுகத்தை இன்று (ஜூலை 24, 2021) சென்றடைந்தது. பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தோனேசியாவிற்கு ஆதரவளிப்பதற்காக 5 கிரையோஜனிக் கொள்கலன்களில் 100 மெட்ரிக் டன் திரவ பிராணவாயு மற்றும் 300 செறிவூட்டிகளை இந்தக் கப்பல் கொண்டு சென்றுள்ளது.நீரிலும் நிலத்திலும் இயங்கும் தன்மையுடைய ஐஎன்எஸ் ஐராவத் கப்பல், பல்வேறு டாங்கிகளையும், தரையிலும் தண்ணீரிலும் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் இதர ராணுவ சரக்குகளையும் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.  மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு வழங்கும் நடவடிக்கைகளிலும், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பல்வேறு நிவாரண உதவிகளை அளிக்கும் பணிகளிலும் இந்தக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.இந்தியாவும், இந்தோனேசியாவும் கலாச்சார மற்றும் வர்த்தக ரீதியில் நெருக்கமாக உள்ளன. பாதுகாப்பான இந்திய- பசிபிக் கடல் பகுதியை உருவாக்குவதற்கு இரண்டு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இரண்டு நாடுகளின் கடற்படைகளும் இருதரப்பு பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்பு  ரோந்து நடவடிக்கைகளின் வாயிலாக தொடர்ச்சியான கூட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

மூலக்கதை