இது உங்கள் இடம்: பிரிச்சு கொடுத்துடுங்க ஸ்டாலின்!

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம்: பிரிச்சு கொடுத்துடுங்க ஸ்டாலின்!

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தி.மு.க.,வின் 125 எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான உதயநிதிக்கு மட்டும் அரசு நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கொடுப்பது பற்றி, இப்பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார்.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியின் வாரிசுகள், அரசு நிர்வாகத்தில் முன்னிலை பெறுவது புதிதல்ல; வழக்கமான ஒன்று தான்.

கடந்த 2006ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், அவரது மகன் ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அரசு நிகழ்ச்சிகளில் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.துணை முதல்வர் என்ற பதவியும் கொடுத்து தன் மகனை அழகு பார்த்தார், கருணாநிதி. அரசு அலுவலகங்களில் கருணாநிதியின் படத்துடன் ஸ்டாலின் படமும் இடம்பெற்றது.அதே பாணியை தான், முதல்வர் ஸ்டாலின் பின்பற்றுகிறார்.

தன் மகன் உதயநிதிக்கு, அரசு நிர்வாகத்தில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறார்.கட்சியின் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் அமைச்சர் பதவி வகித்தாலும், ஸ்டாலின் வாரிசான உதயநிதி தான் அரசு நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குகிறார்.அதே போல தான், 24 தி.மு.க., - எம்.பி.,க்கள் இருந்தாலும், முதல்வர் ஸ்டாலினின் தங்கை கனிமொழிக்கு தான், அரசு நிகழ்ச்சிகளில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது.


திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலை புதுப்பித்தல் தொடர்பான ஆய்வு கூட்டம், சென்னை நுங்கம்பாக்கம் அறநிலைய துறை அலுவலகத்தில், அத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சமீபத்தில் நடந்தது.இதில் மீன்வள துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அறநிலைய துறை முதன்மை செயலர், ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.அறநிலைய துறை அமைச்சருக்கான இடத்தில், துாத்துக்குடி எம்.பி., கனிமொழி அமர்ந்து இருந்தார்.தென் மாவட்டத்திற்கு உதயநிதியையும், வட மாவட்டத்திற்கு கனிமொழியையும் துணை முதலமைச்சராகவே, முதல்வர் ஸ்டாலின் நியமித்து விடலாம். இது போன்ற சர்ச்சை கிளம்பாது!

மூலக்கதை