ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; பளு தூக்குதலில் மீராபாய் அசத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; பளு தூக்குதலில் மீராபாய் அசத்தல்

டோக்கியோ: பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டின் பதக்க எண்ணிக்கையை தொடங்கி வைத்துள்ளார். டோக்கியோவில் நேற்று  ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின.

இன்று காலை தொடங்கிய துப்பாக்கிச்சுடுதல், பேட்மின்டன், வில்வித்தை ஆட்டங்களில் பங்கேற்ற இந்திய வீரர்,  வீராங்கனைகள் தொடர்ந்து தோற்று ஏமாற்றத்தை அளித்தனர். வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய தீபா குமாரி ஜோடியும் தோற்றுப்போனது.



இந்நிலையில் மகளிர் 49 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு சைகோம்(26)) பங்கேற்றார். அவர் ஆட்டத்தின் முடிவில் ஸ்நாச்சில் 87கிலோ கிளீன் அன்டு ஜெர்க்கில் 115 கிலோ தூக்கினார்.

மொத்தம் 202கிலோ தூக்கி பட்டியலில் 2வது இடம் பிடித்தார்.   அதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். சீனாவின் ஹு ஜீஹுயீ  மொத்தமாக 219கிலோ தூக்கி தங்கம் வென்றார்.

இந்தோனேஷியாவின் அய்ஷ் விண்டி  194கிலோ தூக்கி  வெண்கலத்தை கைப்பற்றினார்.

மீராபாய் மூலம் இந்தியா முதல் பதக்கத்தை வென்றதுடன் பதக்கப்பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது.

மணிப்பூர் மாநிலம் இம்பாலை சேர்ந்த மீராபாய் சானு சைகோம்  சமீபத்தில்  தாஷ்கண்டில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் 49கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். ஏற்கனவே 2016ம் ஆண்டு நடந்த ரியோ  ஒலிம்பிக் போட்டியில் மயிரிழையில் பதக்க வாய்ப்பை இழந்தார்.

ஆனால் அடுத்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 48கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார்.

கூடவே ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் கர்ணம் மல்லேஸ்வரிக்கு பிறகு பதக்கம் வெல்லும் 2வது இந்தியர் என்ற பெருமையை  மீராபாய் பெற்றுள்ளார்.

ஆனால் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்ற  பெருமையும் மீராபாயை தான் சேரும்.

மு. க. ஸ்டாலின் வாழ்த்து
 தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது ேபஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: ஒலிம்பிக்கில் முதல் நாளில் இந்தியாவுக்கு ஜொலிக்கும் ஆரம்பம்.

தன் மனதை கவர்ந்த செயலாக்கத்தால் இந்தியாவுக்காக முதல் ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கத்தை பளு தூக்குவதில் கொண்டு வந்த மீரா பாய் சானு சைகோம்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

.

மூலக்கதை